எறியப்பட்டவேகத்திற்குத் தக்க வேகத்தில் தேர் பறந்தது என்பதை ‘ஏய்ந்து எழு தேர்’ எனக் குறித்தார். (55) | 5656. | மதித்தகளிற்றினில் வாள் அரிஏறு கதித்ததுபாய்வதுபோல், கதி கொண்டு குதித்தனன்;மால் வரை மேனி குழம்ப மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன். |
வெம் சினவீரருள் வீரன் - கொடிய சினம் மிக்கவீரர்களுள் பெரு வீரனாகிய அனுமன்; மதித்த களிற்றினில் - தருக்குற்ற யானையின் மீது; வாள் அரி ஏறு கதித்தது பாய்வதுபோல - ஒளிதங்கிய ஆண்சிங்கம் கோபம் கொண்டு பாய்வது போல; கதி கொண்டு குதித்தான் - விரைவாக அவன்மீது குதித்து; மால் வரை மேனி குழம்ப மிதித்தான் - பெரிய மலை போன்ற (அந்த அரக்கனுடைய) உடம்பு சிதைந்து இரத்தம் குழம்பும்படி கால்களால் மிதித்துக் கொன்றான். பஞ்சசேனாபதிகளுள் இரண்டாமவன் கொல்லப்பட்டான். (56) | 5657. | மூண்டசினத்தவர் மூவர் முனிந்தார்; தூண்டிய தேரர்,சரங்கள் துரந்தார்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார், ‘யாண்டு இனிஏகுதி ?’ என்று, எதிர் சென்றார். |
மூவர் மூண்டசினத்தவர் முனிந்தார் - மீதியிருந்த மூவர்மிகுந்த கோபம் உள்ளவர்களாய் (அனுமனிடம்) வெறுப்புற்ற வராகி; தூண்டிய தேரர் - தமது தேர்களைச் செலுத்தியவர்களாய்; சரங்கள் துரந்தார் - (அனுமம் மீது) அம்புகளைத் தொடுத்தனர்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார் - (அவர்கள் மேலும்) தாம் விரும்பிய கொடிய போரை வேறு விதங்களிலும் செய்யத் தொடங்கியவராய்; யாண்டு இனி ஏகுதி ? - இனி நீ எங்குத் தப்பிப் போவாய் ?; என்ற எதிர் சென்றார் - என்று சொல்லிக் கொண்டே அனுமன் முன் எதிர்த்துச் சென்றார்கள். (57) | 5658. | திரண்டுஉயர் தோள் இணை அஞ்சனை சிங்கம், அரண் தரு விண்உறைவார்களும் அஞ்ச, முரண் தரு தேர்அவை ஆண்டு ஒருமூன்றில் இரண்டை இரண்டுகையின்கொடு எழுந்தான். |
|