பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்623

     இந்திரன்இகலின் இட்ட - இந்திரன் போரில்தோற்றுக் கைவிட்டுப்
போன; நொறில் வய - விரைவுள்ளனவும் வெற்றி தரக் கூடியனவுமான;
நூறொடு நூறு புரவி -
இரு நூறு குதிரைகள்; பூண்ட நோன் தேர்
ஏறினன்-
பூட்டப் பெற்ற வலிய தேரின் மீது ஏறினான்; அரக்கர் ஆசி
கூறினர் -
அரக்கர்கள் (அவனுக்கு) வாழ்த்துக் கூறினார்கள்; முரசக்
கொண்மூ குமுறின-
முரசங்களாகிய மேகங்கள் முழங்கின; ஊழி போர்
கடலை ஒப்ப -
யுகமுடிவுக் காலத்தில் நிலை பெயர்ந்து (பொங்கி) வரும்
கடலைப் போல; உரவுத்தானை ஊறின - வலிய சேனைகள் மேன்மேலும்
அதிகமாகத் தொடர்ந்தன.

     நொறில் -விரைவு; நோன் - வலிமை; கொண்மூ - மேகம்.       (7)

5675.

பொரு கடல்மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை;
                                   பொங்கித்
திரிவன மீன்கள்எண்ணில் எண்ணலாம் செம்
                             பொன் திண்தேர்;
உரு உறு மணலைஎண்ணில், எண்ணலாம் உரவுத்
                             தானை;
வரு திரை மரபின்எண்ணில், எண்ணலாம் வாவும்
                             வாசி.

     பொருகடல் மகரம்எண்ணில் - அலைகள் மோதும்கடலில் உள்ள
சுறாமீன்களை எண்ணக் கூடுமானால்; பூட்கை எண்ணலாம் -
(அக்ககுமாரனுடன் போருக்குச் சென்ற) யானைகளை எண்ணிக் கணக்கிடலாம்;
பொங்கித் திரிவன மீன்கள் எண்ணில் -
(அந்தக் கடலில்) செருக்கித்
திரிவனவாகிய மீன்களை எண்ணமுடியுமானால்; செம்பொன்திண் தேர்
எண்ணலாம் -
செம்பொன்னாலான தேர்களை எண்ண முடியும்; உருஉறு
மணலை எண்ணில் -
அக்கடலில் தனித்தனியாகப் பிரித்து வைத்த மணலை
எண்ணக் கூடுமானால்; உரவுத் தானை எண்ணலாம் - வலிமை பொருந்திய
காலாள் சேனையை எண்ண முடியும்; மரபின் வரு திரை எண்ணில் -
முறைமுறையாக வருகிற அலைகளை எண்ணக் கூடுமானால்; வாவும் வாசி
எண்ணலாம் -
தாவிச் செல்லும் குதிரைகளை எண்ண முடியும்.

     அக்ககுமாரனுடன்சென்ற நால்வகைப் படையின் மிகுதி
தெரிவிக்கப்பட்டது.                                         (8)