விரிகதிர் விழுங்க -உலகம்முழுவதும் பரவி விரிந்த சூரியனது ஒளியை அடக்கவும்; வெய்ய அயில்கரம் - கொடிய வேலாயுதங்களினால் தோன்றுகின்ற ஒளி; மணிகள் காலும் அவிர் ஒளி பருக - (ஆபரணங்களில் இழைத்த) இரத்தினங்கள் வெளியிட்டு விளங்குகின்ற ஒளியை அடக்கவும்; அஃகா எயிறு இளம்பிறை ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க - குறைவுபடாத அரக்கர்களுடைய பற்களாகிய இளம் பிறைகள் உண்டாக்கிய விளங்கும் ஒளியில் ஒதுங்கி மறையவும்; யாணர் உயிர்க்கு - (இவ்வாறு இருத்தலால்) (பிறப்புத் தோறும்) புதிது, புதிதாகப் பிறக்கும் உயிர்க் கூட்டத்திற்கு; உலவு இரவும் அன்று - (இது உலகத்தில்) தோன்றுகின்ற இராக்காலமும் அல்ல; பகல் அன்று என்று - (அவ்வாறே உலகத்துத்தோன்றும்) பகலும் அல்ல என்று; உணர்வு தோன்ற - ஓருணர்ச்சி உண்டாகவும்... ‘இடத்துத்துள்ள’என்று அடுத்த கவியோடு தொடரும். கரம் - ஒளி. யாணர் - புதுமை. பிறப்புத் தோறும் புதுமை கொள்வதால் ’யாணர் உயிர்’ என்றார். (15) | 5683. | ஓங்கு இருந்தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித் தூங்கின வீழ,தோளும் கண்களும் இடத்துத் துள்ள, வீங்கின மேகம்எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப, ஏங்கின காகம்ஆர்ப்ப, இருள் இல் விண் இடிப்ப மாதோ; |
ஓங்குஇருந்தடந்தேர் பூண்ட - உயர்ந்த மிகப்பெரியதேர்களில் கட்டப்பெற்ற; உளை வயப் புரவி - பிடரிமயிரை உடைய குதிரைகள்; ஒல் கித்தூங்கின வீழ - சோர்ந்து தூங்கி விழவும்; தோளும் கண்களும் இடத்துத்துள்ள - இராக்கதரது தோள்களும் கண்களும் இடப்பக்கத்துத் துடிக்கவும்;வீங்கின மேகம் - மிக்குள்ள மேகங்கள்; எங்கும் குருதி நீர்த் துள்ளிவீழ்ப்ப - எவ்விடத்தும் இரத்தத் துளியைச் சொரியவும்; ஏங்கின காகம்ஆர்ப்ப - ஏங்கியிருந்த காகங்கள் (மகிழ்ச்சி கொண்டு) ஆரவாரிக்கவும்;இருள் இல் விண் இடிப்ப - இருள் அடையாத (நிர்மலமாயிருந்த) ஆகாயம்இடி முழங்குவது போல ஒலி உண்டாக்கவும். |