பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்649

எயிறுகள் இறுவித்தார்- வேறுசில அரக்கர்கள் பிறைச்சந்திரன் போன்று
வளைந்த தம் பற்களை ஒடித்துக் கொண்டனர்; எரிபோல் குஞ்சியை இருள்
வித்தார் -
நெருப்புச் சுடர் போன்று சிவந்த தமது தலைமயிரை இருள்
போலக் கறுப்பாக்கிக் கொண்டனர்.

     அனுமனுக்கு அஞ்சியஅரக்கர்கள் தம்மை மாற்றிக் கொண்ட சில
செயல்களும் சில சொற்களும் கூறப்பட்டன. கோரைப் பற்கள் தங்களை
அரக்கர் என அடையாளம் காட்டிவிடுமே என அஞ்சி அவற்றை ஒடித்துக்
கொண்டனராம். அவ்வாறே செந்நிற முடியைக் கருநிறமாக்கி அரக்கத்
தோற்றத்தை மாற்றிக் கொண்டனர் என்கிறார் தோல்வியால் வீரத்துக்கு இழுக்கு
தேடிக்கொண்டதோடு உயிர்மீது ஆசை வைத்து, எப்படியாவது
தப்பவேண்டுமே என்று பல்வேறு பொய்க் கோலமும் பொய்ம் மொழிகளும்
கொண்டு கோழைகளாயினர் என்பதாம். மகளிர் முடியைக் கூந்தல் என்றும்
ஆடவர் முடியைக் குஞ்சி என்றும் சொல்லுதல் மரபு.                 (41)

அரக்கிமாரின் அவலநிலை

கலிவிருத்தம்

5709.

குண்டலக்குழை முகக் குங்குமக் கொங்கையார்,
வண்டு அலைத்து எழுகுழல் கற்றை கால் வருடவே,
விண்டு, அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்,
அண்டம் உற்றுளது,அவ் ஊர் அழுத பேர்
                                 அமலையே !

     குண்டலக் குழைமுகம் - குண்டலம் என்னும் காதணி அணிந்த
செவியை உடைய முகத்தையும்; குங்குமக் கொங்கையார் - குங்குமக் குழம்பு
பூசப் பெற்ற மார்பகங்களையும் உடைய அரக்கமகளிர்கள்; வண்டு அலைத்து
எழுகுழல் கற்றை -
வண்டுகளை அலையச் செய்து மேல் எழும்பப் பெற்ற
தமது கூந்தல் தொகுதி; கால் வருட - (அவிழ்ந்து) கால்களிலே விழுந்து
புரண்டு கொண்டிருக்க; அலத்தக விரைக் குமுத வாய் விண்டு விரிதலால்
-
செம்பஞ்சு ஊட்டப் பெற்றதும், வாசனை உடையதும், குமுதமலர்
போன்றதுமான வாய்கள் திறந்து விரிவடைதலால்; அவ் ஊர் அழுத பேர்
அமலை -
அந்த இலங்கை நகரத்தார் அழுத பெரும் ஓசை; அண்டம்
உற்றுளது -
மேலுலகம் வரை எட்டிற்று.