வீரர்கள் - உரிமைத் தொழில்செய்யும் வீரர்கள்; ஐ இரு வெள்ளம் - பத்து வெள்ளம் ஆகும். ‘கா இல்அரக்கர்’ என்றது இவ்வரக்கர் சீறினால் மற்றவர்க்குக் காப்பு இல்லை என்றபடியாம். அகம்படி வீரர் - போர் செய்வோர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்யும் வீரர் என்பதாம் - இவர்களே பத்து வெள்ளமாயின் போர் புரிவோர் புதுயுகம் வந்தது போன்ற கணக்கினர் என்றது பொருத்தமே. (27) | 5744. | வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா, பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;- கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார்.* |
கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார் - வஞ்சம் நிரம்பிய இந்திரசித்துவைச் சுற்றிப் பாதுகாப்பவர்; விற்படை ஓர் நூறுடை வெள்ளம் என்பார் - வில்லேந்திய படைஓர் ஒரு நூறு வெள்ளம் எனும் கணக்கினர் ஆவர்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா - துள்ளிப் பாயும் வாள் ஏந்திய படைஞர் கணக்கிட முடியாதவராம்; பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃது - துவாரம் உடைய துதிக்கையை உடைய யானைப் படையும் அதுபோலவே சொல்ல இயலாத அளவினவாகும். முகத்திற்பூட்டியது போன்ற கையை உடைமையால் யானைக்குப் பூட்கை என்பது பெயர். ‘ஏ’ காரம் அசை. (28) | 5745. | ஆய பெரும்படை செல்வது கண்டு மாயம் மிகும்திறல் வானர வீரன், நாயகனைத் திசைநோக்கி வணங்கி, மேயது ஓர்இன்பம் விளங்கிட நின்றான்.* |
ஆய பெரும்படைசெல்வது கண்டு - அத்தகைய இந்திரசித்துவின் பெரியபடை செல்வதைப் பார்த்து; மாயம் மிகும் திறல் வானர வீரன் - பகைவர்க்கு மயக்கம் உண்டாக்கத்தக்க மிகுந்த வலி படைத்த குரங்கு வீரன் ஆய அனுமன்; நாயகரைத் திசை நோக்கி வணங்கி - இராமபிரானை (அவன் உள்ள) வடதிசை நோக்கி வணங்கி; மேயது ஓர் இன்பம் விளங்கிட நின்றான் - தன்னிடத்தில் உண்டாகிய மகிழ்ச்சி முகத்தில் விளங்கித் தோன்ற நின்றான். |