பக்கம் எண் :

பாசப் படலம்681

     ஆனிடத்து -உண்டாயின என்றால். ஆயின இடத்து என்பது
ஆனிடத்து எனத் தொக்கது.                                    (44)
 

தம்பியின் உடலைக்கண்டு சோகமும் கோபமும் கொள்ளுதல்

5761.

நீப்புண்டஉயிர ஆகி, நெருப்புண்ட நிறத்தில்
                           தோன்றி,
ஈர்ப்புண்டற்குஅரிய ஆய பிணக் குவடு இடறச்
                           செல்வான்;
தேய்ப்புண்டதம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள்
                            தீயில்
காய்ப்புண்டசெம்பின் தோன்ற, கறுப்புண்ட
                            மனத்தன், கண்டான்,

     நீப்பு உண்டஉயிர ஆகி - நீங்குதல் அடைந்தஉயிரை உடையவாய்;
நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி - நெருப்பை ஒத்த நிறமுடையனவாய்க்
காணப்பட்டு; ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய - இழுக்கப்படுதற்குக்
கூடாதனவான; பிணம் குவடு இடற செல்வான் - பிணங்களாகிய மலைகள்
தட்டித் தடுக்க போர்க்கள வழியே செல்பவனான இந்திரசித்து; தேய்ப்பு
உண்ட -
(அனுமனால்) தேய்க்கப்பட்ட; தம்பியாக்கை - தன் தம்பி அக்க
குமாரனுடைய உயிர் நீத்த உடலை; சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்
புண்டசெம்பிற் தோன்ற -
(சினத்தினால்) செந்நிறம் கொண்ட தன்
கண்கள்நெருப்பில் காய்ச்சப்பட்ட செம்புபோல் விளங்க; கறுப்புண்ட
மனத்தன்கண்டான் -
கோபம் கொண்ட மனத்தினனாகப் பார்த்தான்.                    

     
இந்திரசித்து,உயிர்நீத்துக் கிடந்த தன் தம்பியின் உடலைப் பார்த்து,
தேய்த்தவன் ஆகிய அனுமன் மேல் கோபம் கொண்டான் என்பது கருத்து.
                                                        (45)

5762.

தாருகன்குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம்
கூர் உகிர்கிளைத்த கொற்றக் கனகன் மெய்க்
                          குழம்பின் தோன்ற,
தேர் உக,கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்
                           கண்
நீர் உக, குருதிசிந்த, நெருப்பு உக உயிர்த்து
                          நின்றான்.