பக்கம் எண் :

பாசப் படலம்695

     நீண்டவீரனும் - அவ்வாறு பேருருக் கொண்ட வீரனான அனுமனும்;
நெடும் தடம் கைகளை நீட்டி -
நீண்ட பெரிய தனது கைகளை எதிரிலே
நீளச் செலுத்தி; எய்தன ஈண்டு வெம்சரம் எய்திடா வண்ணம் -
(இந்திரசித்தால்) எய்யப் பட்டு விரைந்து வருகின்ற கொடிய அம்புகள்
தன்னுடம்பில் படாதபடி; மீண்டு போய் விழ வீசி - திரும்பி, அவன் மேல்
போய் விழுமாறு வீசி எறிந்து விட்டு; அங்கு அவன் மிடல் தடம் தேர்
பூண் பேயொடு -
அங்கே, அவனது வலிமையுள்ள பெரிய தேரில் கட்டிய
பேய்களையும்; சாரதி தரைபட புடைத்தான் - தேர்ப்பாகனையும் கீழே
விழுந்து இறக்குமாறு அடித்தான்.                                (68)

5785.

ஊழிக்காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ,
பாழித்தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்;
ஆழிப் பல் படைஅனையன, அளப்ப அருஞ்
                                  சரத்தால்,
வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான்.

     அவண் - அந்நிலையில்;ஊழிக் காற்று அன்ன ஒரு பரி தேர் உதவ
-
ஊழிக்காலத்தில் வீசும் பெருங்காற்றுப் போல (வேகமாகச் செல்லும்)
குதிரைகள் பூட்டிய ஒரு தேரை (வேறு ஒரு சாரதி) கொண்டு வந்து தர; பாழி
தோளவன் -
பருத்த தோள்களை உடைய அந்த இந்திரசித்து; அத்தடம்
தேர் மிசை பாய்ந்தான் -
அந்தத் தேரின் மீது பாய்ந்து ஏறி; பல் ஆழி
படை அனையன அளப்ப அரும் சரத்தால் -
பல சக்கராயுதம் போன்ற
அளவிட்டுச் சொல்ல முடியாத அம்புகளால்; வாழி போர் வலி மாருதி
மேனியை மறைத்தான் -
நீடுழி வாழ்பவனும், போர் வலிமையிற்
சிறந்தவனுமான அனுமனது திரு மேனியை மூடி மறைத்துவிட்டான்.

     அனுமனது உடம்புமறையும் படி மிகுதியாக அம்புகளை இந்திரசித்து
எய்தான் என்பதாம். பாழி - பெருமையும் ஆம்; ஆழி - சக்கராயுதம்; கடலும்
ஆம்.                                                 (69)

5786.

உற்றவாளிகள் உரத்து அடங்கின உக உதறா,
கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து,
பற்றி வன்கையால், பறித்து எழுந்து, உலகு எலாம்
                                     பலகால்
முற்றி வென்றபோர் மூரி வெஞ் சிலையினை,
                                   முறித்தான்.