கொற்றமாருதி - வெற்றியை உடைய அனுமன்; உற்ற உரத்து அடங்கின வாளிகள் - வந்து பட்டவையாய் மார்பில் பதிந்தவைகளான (இந்திரசித்தின்) அம்புகள் அனைத்தும்; உக உதறா - கீழே சிந்தும்படி உதறித் தள்ளிவிட்டு; அவன் தேர் மிசை குதித்து - இந்திரசித்துவின் தேரின்மேல் எழும்பிப் பாய்ந்து; உலகு எலாம் பல கால் முற்றி வென்ற போர்மூரி வெம் சிலையினை - உலகும் யாவையும் பல முறை முழுவதும் வென்றதான போரில் சிறந்த அவனது வலிய வில்லினை; வன் கையால் பற்றி - தனது வலிய கையினால் பிடித்து; பறித்து எழுந்து முறித்தான் -பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து ஒடித்தெறித்துவிட்டான். அனுமன் ஆற்றல்கூறப்பட்டது. (70) | 5787. | முறிந்தவில்லி்ன் வல் ஓசை போய் முடிவதன்முன்னர், மறிந்து போரிடைவழிக் கொள்வான், வயிர வாட் படையால் செறிந்த வான்பெரு மலைகளைச் சிறகு அறச் செயிரா எறிந்தஇந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். |
முறிந்தவில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் - ஒடிபட்டஅந்த வில்லி்ன் வலிய ஓசை அடங்குவதற்கு முன்னே, (இந்திரசித்து); போரிடை மறிந்து வழிக் கொள்வான் - போரை மீண்டும் தொடர வேண்டி; வயிர வாள் படையால் - வச்சிராயுதம் என்னும் வாளால்; செறிந்த வான் பெரு மலைகளை - அடர்ந்த மிகப்பெரிய மலைகளை; சிறகு அற செயிரா எறிந்த இந்திரன் - இறகுகள் அற்றுப் போகும் படி சினங் கொண்டு துணித்தவனான தேவேந்திரன்; இட்ட வான்சிலையினை எடுத்தான் - திறையாகக் கொடுத்த பெரிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த வில்ஒடிந்தவுடனே வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டான் இந்திரசித்து. அது, இந்திரன் தனது தோல்விக்குப் பிறகு, திறையாக இந்திரசித்துக்குக் கொடுத்தது. (71) | 5788. | நூறு நூறுபோர் வாளி, ஓர் தொடை கொடு, நொய்தின், மாறு இல் வெஞ்சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்; |
|