ஏறு தேர் இலன் -(தான்மீண்டும்) ஏறிப் போர்புரிய வேறு தேர் இல்லாதவனாய்; எதிர் நிற்கும் உரன் இலன் - (அனுமன்) எதிரே நின்று போர் செய்யும் வலிமை அற்றவனாய்; எரியின் சீறு வெம் சினம் திருகினன் - தீப் போலச் சீறுகின்ற கொடிய சினத்தால் மாறுபட்டவனாகி; அந்தரம் திரிவான் - வானில் சஞ்சரிக்கும் இந்திரசித்து; வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் - செய்வதற்குரியதோர் செயல் வேறு இல்லாமையால்; விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் - பிரம்மதேவனுடைய நிகர் இல்லாத பெரிய ஆயுதமாகிய பிரம்மாத்திரத்தை; தொடுப்பதே மதித்தான் - தூண்டுவதாகிய கடுஞ் செயலையே செய்யத் துணிவு கொண்டான். இந்திரசித்து,பிரம்மாத்திரத்தைத் தொடுக்கத் துணிவதன் காரணம் கூறப்பட்டது. விரிஞ்சன் - பிரம்மன். (79) | 5796. | பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும், தா இல்பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்; தேவு யாவையும்,உலகமும், திருத்திய தெயவக் கோவில் நான்முகன் படைக்கலம் தடக் கையில் கொண்டான். |
தா இல்பாவனையால் - தவறுதல் இல்லாத தியானவகையினால்; பூவும், பூநிற அயினியும் தீபமும், புகையும் கொடுத்து - மலர்களையும் பூநிறம் உள்ள வெண்சோறாகிய நைவேத்தியத்தையும் தீபத்தையும் தூபத்தையும் சமர்ப்பித்து; அருச்சனை சமைத்தான் - பிரம்மாத்திரத்துக்கு அருச்சனை செய்து; தேவு யாவையும் உலகமும் திருத்திய - தெய்வங்கள் எல்லாவற்றையும், உலகங்களையும் ஒழுங்காகப் படைத்த; தெய்வக் கோவில் நான்முகன் படைக்கலம் - தெய்வத் தன்மையுள்ள (திருமாலின் திருநாபிக்கமலமாகிய) சிறந்த இடத்தில் தோன்றி வசிக்கின்ற பிரம்மதேவனுடைய ஆயுதமான பிரம்மாத்திரத்தை; தடம் கையில் கொண்டான் - தனது பெரிய கையில் எடுத்துக் கொண்டான். இந்திரசித்து, பிரம்மாத்திரத்துக்குப் பூசை செய்தது பாவனையால் (தியானத்தால்) என்பது கூறப்பட்டது. போர்க்களம் ஆகையால், பூசைக்கு வெளிப் பொருள்கள் இல்லை என்பது கருத்து. (80) |