அளவு இல்ஆற்றலர் - அளவற்ற வலிமை உடையவர்களும்; மொய்ம்பினின் எறுழ் வலிகருளன் மும்மையார் - தம் தம் பராக்கிரமத்தில் மிக்கவர்களுமான; கிங்கரர் ஐம்பதினாயிரம் ஒரு புடைகிளர்ந்து - ஐம்பதினாயிரம் ஏவலர்கள் ஒரு பக்கத்தில் வந்து கூடி நின்று; பைங்கழல் அனுமனைப் பிணித்த பாந்தளைப் பற்றினார் - பசுமையான வீரக்கழலை உடைய அனுமனைக் கட்டியுள்ள நாக பாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வாராயினர். ஒரு புடை என்றதனால், மறுபக்கத்திலும் ஐம்பதினாயிரர் பற்றியிருக்க வேண்டும் என்று உணரலாம். (12) 5817. | ‘திண்திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான், தண்டல் இல் தன்உருக் கரந்த தன்மையான், மண்டு அமர்தொடங்கினன், வானரத்து உருக் கொண்டனன்,அந்தக்கொல்?’ என்றார் பலர். |
அந்தகன் - (முன்புஇராவணனுக்குத் தோற்று ஓடிய) எமன்; திண் திறல்அரக்கர் தம் செருக்கு சிந்துவான் - மிக்க வலிமை உடைய அரக்கர்களதுகருவத்தை அழிக்கும் பொருட்டு; தண்டல் இல் தன் உரு கரந்ததன்மையான் - அழிதல் இல்லாத தனது வடிவத்தை மறைத்துக் கொண்டவனாய்; வானரத்து உரு கொண்டனன் - குரங்கு வடிவத்தை எடுத்துக் கொண்டு; மண்டு அமர் தொடங்கினன் கொல் - மிக்க போரைத் தொடங்கிச் செய்தனனோ ?; என்றார் பலர் - என்று கூறினார் பல அரக்கர்கள். அனுமன் யாவன்என்பதைப் பற்றி அரக்கர் தமக்குள் ஆராய்ந்தமையைத் தெரிவித்தவாறு. (13) 5818. | அரமியத்தலம்தொறும், அம் பொன் மாளிகைத் தரம் உறுநிலைதொறும், சாளரம்தொறும், முரசு எறிகடைதொறும், இரைத்து மொய்த்தனர்- நிரை வளைமகளிரும், நிருத மைந்தரும். |
நிரைவனைமகளிரும் - வரிசையான பலவளையல்களை அணிந்த அரக்க மகளிரும்; அரமியம் தலம் தொறும் - மாளிகையின்மேல் உள்ள நிலா முற்றங்களிலும்; அம் பொன் மாளிகை தரம் உறு நிலை தொறும் - அழகிய பொன்மயமான வீடுகளின் மேல் நிலைகளிலும்; சாளரம் தொறும் - பலகணிகளிலும்; முரசு எறிகடை தொறும் - பேரிகைகள் முழக்கும் |