பக்கம் எண் :

714சுந்தர காண்டம்

இடங்களிலும்;இரைத்து மொய்த்தனர் - முழக்கமிட்டுக் கொண்டு கூடி
நெருங்கியிருந்தனர்.

     வீதியில் இடம்இல்லாமையைத் தெரிவிக்கின்றது.              (14)

5819.

‘கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்,
மயில் இயல்சீதைதன் கற்பின் மாட்சியால்,
எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்,
அயில் எயிற்றுஒரு குரங்கு ஆய்’ என்பார், பலர்.

     கயிலையின்ஒருதனி கணிச்சிவானவன் - கயிலைமலை மீது உள்ள
ஒப்பற்ற மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய சிவபிரானாகிய தேவன்; மயில்
இயல் சீதைதன் கற்பின் மாட்சியால் -
மயில் போன்ற சாயலை உடைய
சீதையின் பெருமையால்; அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் - கூரிய
பற்களை உடைய ஒரு குரங்கின் வடிவமாய்; எயில் உடை திருநகர் சிதைப்ப
எய்தினன் -
மதில்களை உடைய இந்த அழகிய இலங்கை நகரை
அழிக்கவந்து அடைந்துள்ளான்; என்பார் பலர் - என்று பல அரக்கர்கள்
கூறுவாராயினர்.                                           (15)

5820.

அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர்,
நரம்பினும் இனியசொல் நாக நாடியர்,
கரும்பு இயல்சித்தியர், இயக்கர் கன்னியர்,
வரம்பு அறுசும்மையர், தலைமயங்கினார்.

     அரம்பையர் -தேவமகளிர்; விஞ்சை நாட்டு அளகவல்லியர் -
வித்தியாதர நாட்டுக் கூந்தலை உடைய கொடி போன்ற பெண்கள்; நரம்பினும்
இனிய சொல் நாக நாடியர் -
யாழ் நரம்பின் இசையை விட இனிய
சொற்களை உடைய நாகலோகத்துக் கன்னியர்; கரும்பு இயல் சித்தியர் -
(தம்மை நுகர்வார்க்கு) கரும்பு போன்ற சுவையை நல்கும் சித்த
கணப்பெண்கள்; இயக்கர் கன்னியர் - யட்சகுலமகளிர்; வரம்பு அறு
சும்மையர் -
அளவற்ற இரைச்சலுடையவர்களாய்; தலை மயங்கினார் -
எல்லா இடங்களிலும் வந்து கூடினார்கள்.

     இவர்கள்,இராவணனால் அபகரிக்கப்பெற்று இலங்கையில் கொண்டு
வந்து வைத்திருந்த அவனுடைய காதல் மகளிர்கள். சும்மை - ஒலி. ‘இழுமென்
சும்மை’ - (பொருந. 65)