பக்கம் எண் :

716சுந்தர காண்டம்

 கட்டு்ப்பட்டுச்செல்லும் அனுமன் கருத்து 

5823.

ஆண்தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்;
மீண்டிலன்;வேறலும் விரும்பலுற்றிலன்;
‘ஈண்டு இதுவேதொடர்ந்து இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன்’எனக் கருத்தின் எண்ணினான்.

     ஆண் தொழில்அனுமனும் - ஆண்மைத் தொழிலின்மிக்க
அனுமனும்; மீண்டிலன் - திரும்பிச் செல்லாதனாயும்; வேறலும் விரும்பல்
உற்றிலன் -
அவர்களை வெல்லுதலையும் விரும்பாதவரையும்; ஈண்டு இதுவே
தொடர்ந்து -
இங்கு இப்படியே தொடர்ந்து சென்று; இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன் -
இலங்கை அரசனான இராவணனைப் பார்ப்பதே
நல்லதாகும்; என கருத்தில் எண்ணினன் - என்று மனத்தில்
நினைத்தவனுமாகி; அவரொடு ஏகினான் - அவ்வரக்கர்களுடனே தானும்
கூடச் சென்றான்.

     ‘தொடர்ந்துபோய்’ என்னும் பாடம் ஓசைச் சிதைவு நோக்கி
விடப்பட்டது.                                               (19)

5824.

‘எந்தையதுஅருளினும், இராமன் சேவடி
சிந்தை செய்நலத்தினும், சீதை, வானவர்,
தந்து உளவரத்தினும், தறுகண் பாசமும்
சிந்துவென்;அயர்வுறு சிந்தை சீரிதால்;

     எந்தையதுஅருளினும் - என் தந்தையான வாயுதேவனது
கருணையினாலும்; இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும் -
இராமபிரான்சிவந்த திருவடிகளை யான் தியானம் செய்யும் புண்ணியத்தாலும்;
சீதை,வானவர் தந்துள வரத்தினாலும் -
சீதா பிராட்டியும் தேவர்களும்
கொடுத்துள்ள வரங்களினாலும்; தறுகண் பாசமும் சிந்துவென் - கொடிய
இந்தப் பிரம்மாத்திரத்தையும் அற்றி சிதறிவிடச் செய்யவல்லேன் யான்;
அயர்வுறு சிந்தை சீரிது - (ஆயினும்) இதனால் நான் களைப்புற்றமனத்தோடு
இருப்பதே சிறப்புடைத்தாகும்.

     ‘அயர்வுறு சிந்தைசீரிது’ என்ற தன் காரணம் அடுத்த நான்கு கவிகளில்
விளங்கும். அதற்காகத்தான், அனுமன், அரக்கர்கள் தன்னைக் கட்டி ஈர்த்துச்
செல்ல அடங்கியிருந்தான், என்பதாம். ஆல் - அசை.               (20)