பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்717

5825.

‘வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து
அளவுறு முதியரும்அறிய ஆணையால்
விளைவினைவிளம்பினால், மிதிலை நாடியை,
இளகினன்,என்வயின் ஈதல் ஏயுமால்;

     வளை எயிற்றுஅரக்கனை உற்று - வளைந்த பற்களை உடைய
அரக்கனாகிய இராவணனை அடைந்து; மந்திரத்து அளவுறு முதியரும்
அறிய -
ஆலோசனைச் சபைக்கு உரியராக அளந்து குறிப்பிடப்பட்ட
முதியோர்களும் அறியும்படி; ஆணையால் விளைவினை விளம்பினால் -
இராமபிரான் கட்டளைப் படி, மேல் நிகழக்கூடிய செயல்களை நான் எடுத்துக்
கூறினால்; இளகினன் - (இராவணன்) மனவுறுதி குலைந்து நெகிழ்ந்து;
மிதிலை நாடியை என் வயின் ஈதல் ஏயும் -
மிதிலை நாட்டவளான
சீதையை என்னிடம் கொடுத்து விடக்கூடும்.

     சிந்தைச்சீர்மையால் விளையக் கூடிய முதற் பயன் இது. சீதையைச்
சிறை வீடு செய்தல். ஆல் - ஈற்றசை.                           (21)

5826.

‘அல்லதூஉம், அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
எல்லையும்தெரிவுறும்; எண்ணும் தேறலாம்;
வல்லவன்நிலைமையும் மனமும் தேறலாம்;-
சொல் உக, முகம்எனும் தூது சொல்லவே;

     அல்ல தூஉம் -அதுஅல்லாமலும்; அவனுடை துணைவர்
ஆயினார்க்கு -
அந்த இராவணனுடைய துணைவர்களாய் உள்ளவரின்;
எல்லையும் தெரிவுறும் -
அளவும் தெரிவதாகும்; எண்ணும் தேறலாம் -
அவர்களது உட்கருத்தையும் தெரிந்து கொள்ளலாம்; முகம் எனும் தூது
சொல்லவே -
ஒரு அரசனுக்கு முகம் என்று சொல்லத்தக்க தூதனாக வந்த
நான் (இராமபிரான் சொல்லிய செய்தியை இராவணனிடம்) சொன்னவுடன்;
சொல் உக -
(அவன் வாயினின்று) வார்த்தைகள் சிந்துவனபோல் வெளிப்பட;
வல்லவன் நிலைமையும் மனமும் தேறலாம் -
(அதனால்) வலிமை உடைய
இராவணனது நிலைமையையும் மனப்போக்கையும் தெரிந்து கொள்ளலாம்.

    சிந்தைச்சீர்மையால் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது பயன் ! துணைவர்
அளவும், இராவணனது நிலையும் மனமும் அறிதல் என்பதாகும்.       (22)