| 5827. | ‘வாலிதன்இறுதியும், மரத்துக்கு உற்றதும், கூல வெஞ்சேனையின் குணிப்பு இலாமையும், மேலவன் காதலன்வலியும், மெய்ம்மையான், நீல் நிறத்துஇராவணன் நெஞ்சில் நிற்குமால். |
வாலிதன்இறுதியும் - வாலியின் அழிவும்;மரத்துக்கு உற்றதும் - மராமரத்துக்கு நேர்ந்த அபாயமும்; வெம்கூல சேனையின் குணிப்பு இலாமையும் - கொடிய குரங்குப் படையின் அளவற்ற தன்மையும்; மேலவன் காதலன் வலியும் - சூரிய குமாரனான சுக்கிரீவனுடைய வலிமையும்; நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் - (நான் சென்று சொல்வதால்) நீல நிறத்தை உடைய இராவணனது மனத்தில்; மெய்ம்மையால் நிற்கும் - உள்ளபடி பதியும். சிந்தைச்சீர்மையின் மூன்றாவது பயன்; இராவணன் மனத்தில், வாலியின் மரணம் முதலியன பதிதல் ஆகும். (23) | 5828. | ‘ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும் நீதியும் மனக்கொள நிறுவி, நின்றவும் பாதியின்மேல்செல நூறி, பைப்பையப் போதலே கருமம்’என்று, அனுமன் போயினான். |
ஆதலால் -‘ஆகையால்; அரக்கனை எய்தி - அரக்கனாகிய இராவணனைச் சந்தித்து; ஆற்றலும் நீதியும் மனம் கொள நிறுவி - இராமபிரானுடைய வலிமையையும், நெறி முறையையும் அவன் உள்ளத்தில் பதியும்படிச் செய்து; நின்றவும் - (அதன் பின்பும் இசையாது போனால்) (இதுவரை என்னால் கொல்லப்பட்டவை போக) மீதியாக உள்ள அரக்கர் சேனைகளில்; பாதியின் மேல் செல நூறி - பாதிக்கு மேலாக அழித்துவிட்டு; பைபைய போதலே கருமம் - (அவசரப் படாமல்) மெதுவாகப் போவதே நான் செய்யத்தக்க காரியமாகும்; என்று - என்று எண்ணி; அனுமன் போயினான் - அனுமன் அடங்கி, அந்த அரக்கருடன் சென்றான். நிறுவுதல், நூறுதல், போதல் இவைகளைத் தனது கடமையாகக் கொண்டான் அனுமன். ஒன்றன் பின் ஒன்றாக இவைகளைச் செய்வது என்ற முடிவுடன், அடக்கமாக அனுமன் அரக்கருடன் சென்றான் என்க. நூறுதல் - அழித்தல். (24) |