இந்திரசித்துஅனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல் | 5829. | கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும், புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ, விடைபிணிப்புண்டது போலும் வீரனை, குடை கெழு மன்னன்இல், கொண்டு போயினான். |
கடவுளர்க்குஅரசனை - (இவ்வாறாக) தேவர்களுக்கு தலைவனான இந்திரனை; கடந்த தோன்றலும் - வென்ற வீரனான இந்திரசித்தும்; புடைவரும் பெரும் படை புணரி - பக்கங்களில் சூழ்ந்து வருகின்ற பெரிய சேனையாகிய கடல்; போர்த்து எழ - கவிந்து வர; விடை பிணிப்புண்டது போலும் வீரனை - ஒரு காளை கட்டுண்டது போல விளங்கும் அனுமனை; குடைகெழு மன்னன் இல் - கொற்றக் குடையோடு விளங்கும் அரசனாகிய இராவணனது அரண்மனைக்கு; கொண்டு போயினான் - கொண்டு சென்றான். விடை,ஆண்மைக்கும் பெருமிதத்துக்கும் உறைவிடமானது. (25) தூதுவர் நற்செய்திசொல்ல இராவணன் பரிசளித்தல் | 5830. | தூதுவர்ஓடினர்;தொழுது, தொல்லை நாள் மாதிரம்கடந்தவற் குறுகி, ‘மன்ன ! நின் காதலன் மரைமலர்க் கடவுள் வாளியால், ஏதில் வானரம்பிணிப்புண்டதாம்’ என்றார். |
தூதுவர் ஓடினர் - இந்திரசித்தால் அனுப்பப்பெற்ற தூதர்கள் ஓடிச்சென்று; தொல்லை நாள் - பண்டு; மாதிரம் கடந்தவன் - திசைகளை எல்லாம் வென்றவனாகிய இராவணனை; குறுகி - அணுகி; தொழுது - வணங்கி; மன்ன - ‘அரசனே !; நின் காதலன் - உனது மகனான இந்திரசித்து; மரைமலர் கடவுள் வாளியால் - தாமரைமலர் மீது விளங்கும் பிரம்மதேவனது படையாகிய அத்திரத்தால், (பிரம்மாத்திரம்); ஏதில் வானரம் பிணிப்புண்டது என்றார் - பகைமை கொண்ட குரங்கு கட்டுப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். தூதுவரின் செயலும்சொல்லும் கூறப்பட்டது. (26) |