| 5831. | கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என ஈட்டு இருள்விழுங்கிய மார்பின், யானையின் கோட்டு எதிர்பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர் நீட்டினன்-உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான். |
கேட்டலும் -அதனைக்கேட்டவுடன்; உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் - மகிழ்ச்சியால் ஓங்கிய மனமுடைய இராவணன்; கிளரீ சுடர் கெட்ட வான் என - விளங்குகின்ற (இரவில்) சந்திரன் ஒழியப் பெற்ற ஆகாயம் போல; ஈட்டு இருள் விழுங்கிய - செறிதலுள்ள இருளினால் விழுங்கப்பட்ட (மிகக்கறுத்த); மார்பின் - தன் மார்பினிடத்து; யானையின் கோடு எதிர் பொரு - (முன்) திக்கஜங்களின் தந்தங்களோடு புரண்டு மோதிக் கொண்டிருந்த; பேர் ஆரம் கொண்டு எதிர் நீட்டினான் - பெரிய முத்துமாலையைக் கழற்றிக் கொண்டு (நற்செய்தி சொன்ன தூதர்க்கு) வெகுமதியாகக் கொடுத்தான். தூதுவர் கூறியநற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்துள்ளது என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு தெரிவிக்கின்றது. (27) குரங்கைக்கொல்லாது கொணர, இராவணன் பணித்தல். | 5832. | எல்லை இல்உவகையால் இவர்ந்த தோளினன், புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன், ‘ஓல்லையின் ஓடி,நீர் உரைத்து, என் ஆணையால், “கொல்லலை தருக”எனக் கூறுவீர்’ என்றான். |
எல்லை இல்உவகையால் - அளவற்றமகிழ்ச்சியினால்; இவர்ந்த தோளினன் - பூரித்த தோள்களை உடையவனும்; புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன் - தழுவுமாறு நன்று மலர்ந்த கண்களாகிய செவ்வாம்பல் மலர்களை உடையவனுமாகிய இராவணன்; நீர் ஒல்லையின் ஓடி - நீங்கள் விரைவாக ஓடிச் சென்று; என் ஆணையால் உரைத்து - எனது கட்டளையாகச் சொல்லி; ‘கொல்லலை தருக’ என கூறுவீர் என்றான் - ‘அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் கொண்டு இங்குத்தருக’ என்று இந்திரசித்துவிடம் சொல்லுவீர் என்று கூறினான், (28) |