பக்கம் எண் :

724சுந்தர காண்டம்

காட்டினாய்க்கு -(போக்கநினைத்த) என் அரிய உயிரை அழியாது நிற்கச்
செய்த உனக்கு; ஊழி காட்டுவென் என்று உரைத்தேன் - (அதற்கு ஈடாக)
கற்ப கோடி காலம் உன் வாழ்நாள் நீடிக்கும் என்று உனக்கு உறுதிமொழியான
ஆசி கூறினேன்; அது வாழி காட்டும் என்று உண்டு - அது பொய்க்காது
உன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பது உறுதியாக உள்ளது; (அவ்வாறாக); உன்
வரை புயம் பாழி காட்டி -
உனது மலை போன்ற தோள்களின் வலிமையை
போரில் தோன்றச் செய்து, (முடிவில்); அரும்பழி காட்டினாய் - நீக்குதற்கு
அரிய ஒரு பழியை உண்டாக்கிக் கொண்டாய். (இதற்கு நான் என்ன
செய்வேன்).

    திருவாழியேபிராட்டியின் உயிரை நிலைக்கச் செய்ததால், ‘ஆழிகாட்டி
என் ஆருயிர் காட்டினாய்’ என்றாள். ‘அரும்பழி’ என்பது இராமதூதன்
பகைவர் கையில் அகப்பட்டதாகும். ‘என் வாழ்த்துப் படி நீடூழி
வாழ்வை’யாயினும் அரக்கர் கையில் அகப்பட்டதனால், வாழ்த்து
பழுதுபட்டதோ என்று நினைத்து வருந்தினாள்                    (34)

5839.

‘கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
“மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
கொண்டு மன்னவன்போம்” எனும் கொள்கையைத்
தண்டினாய்-எனக்குஆர் உயிர் தந்த நீ !’

     எனக்கு ஆருயிர் -எனக்குஅரிய உயிரை; தந்த நீ - அளித்த நீ;
கண்டு போயினை - (இராமபிரான் ஆணைப்படி) என்னைக் கண்டு சென்றாய்
(அதற்கு மேல்); நீள்நெறிகாட்டிட - நீண்ட வழியைக் காட்டிக் கொண்டு நீ
முன் வர; மன்னவன் - தலைவனான இராமபிரான் (இங்குவந்து); மண்டு
போரில் -
அடர்ந்த கடும் போரினிடத்து; அரக்கனை மாய்த்து -
இராவணனைக் கொன்று; எனைக் கொண்டு போம் - என்னைச் சிறை
மீட்டுக் கொண்டு போவான்; எனும் கொள்கையை - என்று நான் நம்பிக்
கொண்டிருந்த கோட்பாட்டை; தண்டினாய் - தவிர்த்து நடந்தாய்
(நீக்கிவிட்டாய்).

     வளர்த்தவனேஅழித்தாற் போல, ஆருயிர் தந்த நீயே, ‘இராமபிரான்
என்னை மீட்பான்’ என்ற என் நம்பிக்கையை அழித்து விட்டாய் என்றபடி.
தண்டுதல் - தவிர்ந்து செல்லுதல். ‘கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்’
(முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து -3) தண்டாய் - திருப்பிவாங்கிக்
கொண்டாய் என்பது பழைய உரை.                            (35)