| 5840. | ஏயபன்னினள் இன்னன; தன் உயிர் தேய, கன்றுபிடியுறத் தீங்கு உறு தாயைப் போல,தளர்ந்து மயர்ந்தனள்- தீயைச் சுட்டதுஓர் கற்பு எனும் தீயினாள். |
தீயை சுட்டது ஓர்கற்பு எனும் தீயினாள் - நெருப்பையும் சுட்டு அவிக்கும் ஒரு கற்பு என்னும் பெரிய தீமை உடைய சீதாபிராட்டி; இன்னன் ஏய பன்னினள் - இத்தன்மையான வார்த்தைகளைத் தகுதியாகச் சொன்னவளாய்; தன் உயிர் தேய கன்று பிடி உற தீங்கு உறும் தாயைப் போல - தனது ஆன்மவலி குன்றும்படி தன்கன்று (புலி முதலிய கொடிய மிருகத்தினிடம்) பிடிபட வருந்தும் தாய்ப்பசுவைப் போன்று; தளர்ந்து மயர்ந்தனள் - சோர்வுற்று மயக்கம் அடைந்தாள். ‘தீயைச் சுட்டதுஓர் கற்பு’ - சுட்டது என்பது காலம் கருதாது தன்மை கருதியதாகும். இது யுத்தகாண்ட இறுதியில் சீதாபிராட்டியின் கற்புச் சோதனையில் நிரூபிக்கப்படுவதாகும். ‘கற்பெனும் தீயினாள்’ என்று முடிவது, அத்தீயே, பின்பு அனுமன் வாலில் இட்ட தீயாக மாறி, இலங்கையைச் சுடுவதற்குக் காரணமாவதைக் குறிப்பித்தவாறு. ‘மடவார் துயர் வீணாகாது’ என்பதற்கு இது ஒரு சான்று. (36) இந்திரசித்து,அனுமனை அரண்மனையுள் கொண்டு சேர்தல் | 5841. | பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர் முருந்தன், மற்றைஉலகு ஒரு மூன்றையும் அருந் தவப்பயனால் அரசு ஆள்கின்றான் இருந்த, அப்பெருங் கோயில் சென்று எய்தினான். |
பெருந் தகைப்பெரியோனை - பெருமைக் குணத்திலும்அறிவிலும் பெரியோனான அனுமனை; பிணித்த போர் முருந்தன் - கட்டிய, போரில் வல்லவனான இந்திரசித்து; மற்றை உலகு ஒரு மூன்றையும் - இலங்கையோடல்லாது மற்ற (சுவர்க்கம் பூமி பாதலம்) மூன்று உலகங்களையும்; அரும் தவப்பயனால் - தான் முன் செய்த அரிய தவப் பயனால்; அரசு ஆள்கின்றான் இருந்த - அரசனாயிருந்து ஆள்கின்ற இராவணன் தங்கியிருந்த; அ பெருங் கோயில் - அந்தப் பெரிய அரண்மனையில்; சென்று எய்தினான் - சென்று அடைந்தான். |