மரகதம் தொழும்கதிரொடு மாணிக்க நெடுவாள் - (தன்முடிகளிலுள்ள) மரகதங்களின் செழுமையான ஒளிகளுடனே மாணிக்கங்களின் நீண்ட ஒளியும்; நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க - நரகலோகத்தினுள்ளே (எச்சுடர்க்கும்) அஞ்சாது நிறைந்திருக்கின்ற இருளையும் தாவி விழுங்க; சிரம் அனைத்தையும் திசைதொறும் திசை தொறும் செலுத்தி - தன்பத்துத் தலையையும், எல்லாத்திசைகளிலும் செல்லுமாறு பரப்பிக் கொண்டு; உரகர் கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப - பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன் மகிழ்ச்சியோடு அரசு கட்டிலில் வீற்றிருந்தது போல் விளங்கவும். இராவணன்ஆதிசேடனுக்கு ஒப்பாக வீற்றிருந்தான் என்க. இராவணன் பத்துத்தலைகளை உடையவனாதலால், ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனுக் கு உவமையாக்கப் பெற்றான். நரகலோகம் எப்போதும் இருளால் மூடப்பட்டிருக்கும் என்பதை, அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்’ 121. (பரி - உரை-) என்ற குறளாலும் உணரலாம். (41) | 5846. | குவித்தபல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப, சவிச் சுடர்க்கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க, புவித் தடம்படர் மேருவைப் பொன் முடி என்னக் கவித்து, மால்இருங் கருங்கடல் இருந்தது கடுப்ப, |
குவித்த பல் மணிகுப்பைகள் - தொகுத்துப் பதிக்கப்பெற்ற பலவகையான இரத்தினங்களின் தொகுதிகள்; கலையொடும் கொழிப்ப சவி சுடர்கலன் - மேலாடையுடன் புரண்டு விளங்கவும், ஒளியின் சுடரை வீசும் ஆபரணங்கள்; அணிந்த - (தம்மை) அணிந்துள்ள; பொன்தோளொடு - அழகிய தோள்களோடு; தயங்க - (அமைந்து) விளங்கவும், (அதனால்); மால் இரும் கரும் கடல் - மிகப் பெரிய கரிய கடலானது; புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன கவித்து இருந்தது கடுப்ப - பூமியினிடத்துப் படர்ந்து விளங்கும், மேருமலையை பொன்முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல் விளங்கவும். மால்இருங்கருங்கடல், மேருவை முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல, இராவணன் வீற்றிருந்தான் என்பதாம். |