வேர்த்தாள் - உடல்வியர்த்தாள்; உலந்தாள் - (மனம்) அழிந்தாள்; விம்மினாள் - ஏக்கமுற்றாள்; விழுந்தாள் - நிலத்தில் சாய்ந்தாள்; அழுதாள் - வாய்விட்டு அழுதாள்; வெய்து உயிர்த்தாள் - வெப்பமாகப் பெருமூச்சு விட்டாள். அனுமனைக்கயிறுகளால் கட்டி இழுத்த அரக்கர்களது மகிழ்ச்சி ஆரவாரிப்பும், அது கேட்ட பிராட்டியின் சோக நிலையும் உரைக்கப்பட்டன. (126) | 5931. | ‘தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவு இல்லா நாயே அனைய வல்அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ ? நீயே உலகுக்கு ஒருசான்று; நிற்கே தெரியும் கற்பு;-அதனில் தூயேன் என்னின்,தொழுகின்றேன்,-எரியே!- அவனைச் சுடல் !’ என்றாள். |
எரியே - (பிராட்டிஅக்கினி தேவனை நினைத்து) ஏ! நெருப்புக் கடவுளே!; தாயே அனைய கருணையான் துணையை - (எல்லா உயிர்களிடத்தும்) தாய் போன்று அருள் புரியும் இராமபிரானுக்கு உயிர்த்துணைவனான அனுமனை; ஏதும் தகைவு இல்லா - சிறிதும் பெருமைக்குணம் இல்லாத; நாயே அனைய - நாய் போல இழிந்த; வல் அரக்கர் நலிய கண்டால் - கொடிய அரக்கர்கள் துன்புற்ற நீ பார்த்தால்; நல்காயோ - அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?; நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே கற்பு தெரியும் - நீதான், உலகம் அனைத்துக்கும் ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன்; (ஆதலால்) உனக்கே எனது கற்பு நிலை தெரியும்; அதனில் தூயேன் என்னின் அவனை சுடல் - அந்தக் கற்புத் திறத்தில் நான் தூய்மை உடையவள் என்பது உண்மையானால், அந்த அனுமனை நீ சுடாதே; தொழுகின்றேன் - உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்; என்றாள் - என்று உறுதியிட்டுக் கூறினாள். பிராட்டிஅக்கினி தேவனிடம், அனுமனைச் சுட்டு வருத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டாள் என்க. (127) |