அனல் குளிர்ந்தமைகண்டு அனுமன் மகிழ்தல் கலிவிருத்தம் | 5932. | வெளுத்தமென் நகையவள் விளம்பும் ஏல்வையின், ஒளித்த வெங்கனலவன் உள்ளம் உட்கினான்; தளிர்த்தனமயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால், குளிர்த்தது, அக்குரிசில் வால், என்பு கூரவே.+ |
வெளுத்த மென்நகையவள் - வெண்மையான மெல்லியபற்களை உடைய பிராட்டி; விளம்பும் ஏல்வையின் - இவ்வாறு கூறிய போது; ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான் - ஒளி பெற்ற வெவ்விய தீக்கடவுள் மனத்தில் அச்சம் கொண்டான்; புறம் மயிர்தண்மையால் சிலிர்ப்ப - (அவ்வளவில், அனுமனின்) உடலின் மேல் உள்ள உரோமங்கள் குளிர்ச்சியால் புளகித்து; தளிர்த்தன - செழிப்புற்றன; அக்குரிசில் வால் - அந்தச் சிறந்த அனுமனது வால்; என்பு கூர குளிர்த்தது - எலும்பு வரையிலும் மிகுதியாக (உட்புறமும்) குளிர்ச்சியடைந்தது. தீக்கடவுளின்வெம்மை நீங்கினவுடன், அனுமனது மயிர்ப்புறம் சிலிர்ப்பத்தளிர்த்தன; வால் என்பு கூரக் குளிர்ந்தது என்க. குரிசில் - ஆண்டகையான அனுமான். (128) அறுசீர் ஆசிரியவிருத்தம் | 5933. | மற்றுஇனிப் பல என் ? வேலை வட அனல், புவி அளாய கற்றை வெங்கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும் முற்றுறு மும்மைச்செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட கொற்றவன்நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. |
வேலை வட அனல் -கடலில்உள்ள வடவாமுகாக் கினியும்; புவி அளாய கற்றை வெம் கனலி மற்றை காயத் தீ - பூமியில் பொருந்திய தொகுதியாகிய வெப்பம் உள்ள நெருப்பும், அதுவல்லாதவானத்தில் அமைந்த நெருப்பும்; முனிவர் காக்கும் முற்றுறுமும்மை செந்தீ - முனிவர்கள் காத்து வளர்க்கும் (வைதிக |