பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்803

அழுதனர். சோகத்தைத்தணித்துக் கொள்ள, தமது கணவன்மார்களைத்
தொடர்ந்து சென்று தழுவிக்கொள்ள ஓடினர்; அதற்குள் புகை மிகுந்தமையால்
அதில் மறைந்தனர். இக்காட்சி, மின்னல் மேகத்தில் மறைந்ததது
போன்றிருந்தது.                                            (27)

5970.

வரையினைப்புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
புரை இல் பொன்கலன் வில்லிட விசும்பிடைப்
                                 போவார்,
கரை இல் நுண்புகைப் படலையில் கரந்தனர்;
                                 கலிங்கத்
திரையினுள்பொலி சித்திரப் பாவையின் செயலார்.

     வரையினை புரைமாடங்கள் எரி புக - மலையை ஒத்த மிகப்
பெரியமாளிகைகளில் நெருப்புப் பற்றிக் கொள்ள; மகளிர் - அங்கிருந்த
அரக்கமாதர்கள்; புரை இல் பொன் கலன் வில்லிட - குற்றமற்ற அழகிய
பொன்மயமான தமது ஆபரணங்கள் ஒளி வீச; விசும்பிடை போவார் -
வானத்தில் எழுந்து சென்றவர்களாய்; கரை இல் நுண் புகை படலையில்
கரந்தனர் -
அளவு இல்லாத நுண்ணிய புகையின் திரளிலே மறைந்தார்கள்;
(அதனால், அவர்கள்) கலிங்கம் திரையினுள் பொலி சித்திரம் பாவையின்
செயலார் -
கலிங்க நாட்டில் நெய்த துணித் திரையின் உள்ளே விளங்குகின்ற
அழகிய பதுமையின் செயலை அடைந்தவர்களாயினர்.

     நுண்புகைத்தொகுதிக்கு, கலிங்கத்திரையும், அழகிய மகளிர்க்கு சித்திரப்
பதுமையும் உவமைகள். கலிங்கத்திரை - கலிங்க நாட்டுத் துணியால் ஆன
திரைச் சேலை. பாவை - பெண் போன்ற ஓவியம்.                  (28)
 

நந்தன வனங்கள்முதலியன வெந்தொழிந்த காட்சி

5971.

அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
புகல் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம்
                           போர்ப்ப,
பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள்.

     பகரும் ஊழியில்- நூல்களில் கூறப்படுவதான யுக முடிவுக் காலத்தில்;
காலம் வெம் கடும் கனல் பருகும் மகர வேலையின் - மிகக் கொடிய
காலாக்கினி உறிஞ்சி வற்றச் செய்யும் மகரம்