தேனும்சாந்தமும் - தேனையும் சந்தனத்தையும்; செறிநறும் - நறுமணம் செறிந்துள்ள; மான்மதச் சேறும் - கஸ்தூரிக் குழம்பையும்; வான நாள் - வானிலுள்ள நட்சத்திரங்களைப்போல; மலர் - மலர்ந்த; கற்பகமலர்களும் - கற்பகப் பூக்களையும்; வயமா - வெற்றி பெற்ற யானைகளின்; தானவாரியும் - மதவெள்ளத்தையும்; நீரொடு மடுத்தலின் - நதியின் நீருடன் உட்கொண்ட காரணத்தால்; அவ்வேலை - அக் கடலானது; தழீஇய மீனும் - தன்னைச் சார்ந்து வாழ்கின்ற மீன்களும்; தானும் - (கடலாகிய) தானும்; ஓர் வெறிமணம் கமழும் - ஒப்பற்ற தெய்வமணம் பெறும். கடலானது, தேன்முதலாகிய பொருள்களை நதியில் நீருடன் மடுப்பதால் மீனும் தானும் தெய்வமணம் பெற்றது. வெறி - தெய்வத்தன்மை - வெறியுறு சிறப்பு (தொல் - பொருள்) நீர் என்றது நதியை. நீர்ப்பிணக்கு, நிலப்பிணக்கு என்னும் தொடர் காண்க - (தனிச்சுலோகி - கிட்கிந்தா) நாள் - நட்சத்திரம். மலர் என்பது கற்பகத்தைச் சாராது மலரைச் சார்ந்தது, தழாத்தொடர். (17) | 4852. | தெய்வத்தச்சனைப் புகழ்துமோ ? செங்கண்வாள் அரக்கன் மெய்ஒத்துஆற்றிய தவத்தையே வியத்துமோ ? விரிஞ்சன் ஐயப்பாடு இலாவரத்தையே மதித்துமோ ? அறியாத் தொய்யல்சிந்தையேம், யாவரை யாதென்று துதிப்போம். |
தெய்வத்தச்சனைப புகழ்துமோ ? - (இந் நகரை அமைத்த) தேவசிற்பியைப் புகழ்வோமா..?; செங்கண்வாள் அரக்கன் - சிவந்த கண்களையும் வாளையும் பெற்ற இராவணன்; மெய் ஒத்து - சத்தியத்துடன் ஒன்றுபட்டு; ஆற்றிய - செய்த; தவத்தையே - தவம் ஒன்றையே; வியத்துமோ - மதிப்போமா? விரிஞ்சன் - பிரம்மதேவன் (வழங்கியது); ஐயப்பாடு இலா - சந்தேகத்துக்கு இடம் இல்லாத; வரத்தையே - வரத்தை மட்டும்; மதித்துமோ - மதிப்போமா? அறியா - (ஒன்றைத் தேர்ந்து புகழ்வதை) அறியாத; தொய்யல் சிந்தையேம் - தளர்ந்த மனத்தைப் பெற்றயாம்; யாவரை - தச்சன், பிரம்மன் - இராவணன் என்னும் இவருள் எவரை; யாதென்று - எவ்வாறு; துதிப்போம் - புகழ்வோம். ‘யாவரை யாதுஎன்று துதிப்போம்’ என்னும் பாடம் நிரம்பவுள்ளது. எவ்வகை துதிப்போம் என்னும் பாடம் சிறந்தது என்பது என் கருத்து. யாவரை - யாது என்று அமைத்தால் திணை வழுவுள்ளது. (18) |