பக்கம் எண் :

814சுந்தர காண்டம்

     தம் கிளைதிருவொடும் காணார் - (அவ்வாறு இராவணன்
கேட்டதும்)தமது சுற்றத்தாரையும் வீரம் செல்வம் முதலிய பொலிவையும்
இழந்து;இரங்குகின்ற வல் அரக்கர் - ஏங்கிக் கொண்டிருக்கின்ற வலிய
அரக்கர்கள்;கரங்கள் கூப்பினர் ஈது இயம்பினர் - கைகளைக் கூப்பிக்
கொண்டுபின்வரும் இச்செய்தியைச் சொன்னார்கள்; இறையோய் ! -
அரசனே !;தரங்க வேலையின் நெடியதன் வால் இட்டதழலால் -
அலைகளை உடையகடலினும் நீண்ட தனது வாலிலே நாம் வைத்த
நெருப்பால்; குரங்கு சுட்டதுஈது என்றலும் - அக்குரங்கு எரித்தது
இதுவாகும் என்று சொன்ன உடன்;இராவணன் கொதித்தான் - இராவணன்
கோபம் கொண்டான்.                                       (45)

5988.

‘இன்று புன்தொழில் குரங்குதன் வலியினால்,
                         இலங்கை
நின்று வெந்து,மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்றுதேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று ! நன்று! போர் வலி’ என, இராவணன்
                        நக்கான்.

     இன்று - இன்றைக்கு; புன் தொழில் குரங்கு தன் வலியினால் -
அற்பத் தொழிலை உடைய (ஒரு) குரங்கினது வலிமையினால்; இலங்கை
நின்று வெந்து மாநீறு எழுகின்றது -
இலங்கை நகர் நின்று எரிந்து பெருஞ்
சாம்பல் பறக்கின்றதாயிற்று; நெருப்பு தின்று தேக்கிடுகின்றது - நெருப்பு
நகரத்தை உண்டு ஏப்பம் விடுவதாயிற்று; தேவர் சிரிப்பார் - (இதனைக்
கண்டால், நமக்குத் தோற்றுவலி இழந்த) தேவர்களும் நகைப்பார்கள்; போர்
வலி நன்று நன்று என -
தமது போர்த்திறமை மிக நன்றாக இருக்கிளது
என்று சொல்லி; இராவணன் நக்கான் - இராவணன் (வெகுளி மேலீட்டால்)
சிரித்தான்.

     இலங்கைஎரியுண்டதற்கு, இராவணன் நாணம் தோன்ற, கோபத்தோடு
நக்கான் என்க. தேக்கிடுதல் - நிறைந்து ஏப்பம் விடுதல். ‘தீமுற்றத்
தென்னிலங்கை ஊட்டினான்’ என்ற திருவாய் மொழித் தொடர் (2.1.3)
விளக்கத்துக்கு ‘செந்தீ உண்டு தேக்கிட்டதே’ என்று மேற்கோள்
காட்டப்பெற்றுள்ளது.                                         (46)