முட்டை கீண்டிலது -பிரமன்படைத்த உலகம், பிளந்து போகவில்லை; அனந்தன் உச்சி கிழிந்திலது - ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம் கிழிந்து போகவில்லை; வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி மேல் வந்தனவில்லை; சுடர்கள் யாவும் விழுந்தில - சூரியன் சந்திரன் முதலிய ஒளியுள்ள நட்சத்திரங்கள் யாவும் கீழே விழுந்து அழியவில்லை; வேதம் செய்கை மாண்டிலது - வேதங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களும் அழிந்தனவல்ல; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி - என்கின்ற இத்தன்மை மெய்யாயிருத்தலை நோக்கி, (அதனால்) உணர்வாயாக. வாய்மை,வாய்மையால் உணர்தி’ என இயையும், இராவணன் பிராட்டியைத் தீண்டிலன் என்னும் வாய்மை கடல்கள் எழுந்து பொங்காமை முதலியவற்றால் அறியக்கிடக்கும். பிராட்டியின் புனிதத் தன்மையால்தான், இயற்கை நிகழ்ச்சிகள் மாறுபடாமல் நிற்கின்றன என்று கூறப்பட்டது. (33) | 6040. | ‘சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த மாகத்தார்தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள்,இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும், ஆகத்தாள்அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள். |
சோகத்தாள் ஆயநங்கை - (உன்னைப் பிரிந்த பெரும்) துக்கத்தை உடையவளான பிராட்டியின்; கற்பினால் மாகத்தார் தேவி மாரும் - கற்பின் சிறப்பால், வானில் உள்ள தேவர்களி்ன் மனைவிமார்களும்; தொழுதற்கு ஒத்த வான் சிறப்பு உற்றார் - யாவரும் வணங்குவதற்கு ஏற்ற பெரும்சிறப்பை அடைந்தார்; மற்றை ஈசன் பாகத்தாள் இப்போது மகுடத்தாள் - அதுவல்லாமல் சிவபிரானது உடம்பின் ஒரு பாகத்தில் இருக்கும் உமாதேவி, இந்த சமயத்தில் அப்பெருமானது தலைமேல் இருக்கும் சிறப்பினை உடையவளானாள்; பது மத்தாளும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும்; மாயன் ஆகத்தாள் அல்லன் - இனித் திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கத் தக்கவள் அல்லள் |