| கொன்று தின்றல்லது, ஓர் எண்ணம் கூடுமோ?' |
| என்றனன்-இகல் குறித்து எரியும் கண்ணினான். |
| |
இகல் குறித்து எரியும் கண்ணினான்- பகைவரை நினைத்து, கோபத்தால் நெருப்பென ஒளிரும் கண்ணினனான மாபக்கன்; நின்று நின்று இவை சில நேர்கிலன்- ஒருவர் பின் ஒருவராக நின்று இத்தகைய பேச்சுக்களைப் பேச நான் உடன்படேன்; இனி நரரொடு குரங்கை- இனி மனிதர்களுடன் அக்குரங்கை; நாம் அறக்கொன்று- நாம் சென்று அடியோடு கொன்றழித்து; நன்று தின்று அல்லது - நன்றாக தின்று அல்லது; ஓர் எண்ணம் கூடுமோ என்றனன்- இதற்கு மாறுபட்ட ஒரு எண்ணம் தகுமோ? தகாது என்றான். |
குறித்தல் - நினைத்தல், 'நாம்' என்பது நாமம் என்பதன் விகாரம் என்று கொண்டு, 'நாமற' என்பதற்கு .குரங்குகள் என்ற பெயரே இல்லாமல் அழித்து என்றும் பொருள் கூறுவர். |
(41) |
பிசாசன் முதலியோர் கூற்று |
6112. | 'திசாதிசை போதும் நாம், அரசன் செய் வினை |
| உசாவினன், உட்கினன்; ஒழிதும் வாழ்வு' என்றான்- |
| பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் |
| நிசாசரன், உருப் புணர் நெருப்பின் நீர்மையான். |
| |
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற - பிசாசன் என்னும் பெயர் உடைய; பெய்கழல் நிசாசரன்- வீரக்கழல் அணிந்த அரக்கன்; உருப்புணர் நெருப்பின் நீர்மையான் - வடிவத்தில் அசுரன் எனினும் நெருப்பைப் போன்ற தன்மை உடையவன்; அரசன் செய்வினை உசாவினன் - அரசன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் கேட்டான்; உட்கினன் - ஒரு குரங்கால் இலங்கை அழிந்ததை எண்ணி நாணினான்; நாம் திசை திசை போதும் - நாம் எங்காவது வேறு வேறு திசைகளுக்குச் செல்வோம்; ஒழிதும் வாழ்வு என்றான் - சென்று நமது வாழ்வைப் போக்கிக் கொள்வோம் என்றான். |
பிசாசன்-நெருப்பின் நீர்மையான் - அரசன் செய்வினை உசாவினான். உட்கினன் திசா திசை போதும் வாழ்வு ஒழிதும் என்றான் என இயையும். இரவில் இயங்குவோர் என்ற கருத்தில் அரக்கரை நிசாசரர் என்பர். |
(42) |