6113. | 'ஆரியன் தன்மை ஈதுஆயின், ஆய்வுறு |
| காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால், |
| சீரியர் மனிதரே; சிறியம் யாம்' எனா, |
| சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான். |
| |
சூரியன் பகைஞன் என்று ஒருவன் - சூரிய சத்துரு என்ற பெயர் கொண்ட அரக்கவீரன்; ஆரியன் தன்மை ஈது ஆயின்- மேலோனாகிய நம் மன்னன் தன்மை இதுவென்றால்; ஆய்வுறு காரியம் ஈது எனின் - நாம் எல்லாம் கூடி ஆராய்ச்சி செய்யும் காரியம் இது என்றால்; கண்ட ஆற்றினால் - இது கொண்டு ஆயும் நெறியினால்; சீரியர் மனிதரே - சிறந்தவர்கள் மனிதரே ஆவர்; யாம் சிறியம்- அரக்கராகிய நாம் சிறியவர்களே யாம்; எனச் சொல்லினான் - என்று வருந்திக் கூறலானான். |
ஆரியன்-மேலோன்; இங்கு இராவணனை உணர்த்தும். அற்ப மனிதர்களையும், குரங்கையும் அழிப்பதற்காக ஆராய்வது செயல் எனின், மனிதரே உயர்ந்தவராய் விடுவர்; அரக்கர் சிறியர் என்றாகிவிடுமே என்பது சூரியன் பகைஞனின் வருத்தம். |
(43) |
6114. | 'ஆள்வினை நிலைமையும், அரக்கர் ஆற்றலும், |
| தாழ் வினை இதனின்மேல் பகரத் தக்கதோ? |
| சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம்!' எனா, |
| வேள்வியின் பகைஞனும் உரைத்து, வெள்கினான். |
| |
வேள்வியின் பகைஞனும் - வேள்வியின் பகைஞன் என்ற பெயருடைய ஒரு அரக்கனும்; சூழ்வினை - இந்த மந்திராலோசனைக் கூட்டம்; மனிதரால் தோன்றிற்றாம் - மானிடர் காரணமாக நிகழ்ந்தது என்றால்; ஆள்வினை நிலைமையும்- அரக்கர்களாகிய நமது ஆட்சியின் மேன்மையும்; அரக்கர் ஆற்றலும் - அரக்கர்களாகிய நம் வலிமையும்; தாழ்வினை இதனின் மேல்- தாழ்ந்த செயல் இதை விடவும்; பகரத்தக்கதோ - வேறு சொல்லத் தகுந்ததுண்டோ; என உரைத்து வெள்கினான்- என்று கூறி வெட்கமுற்றான்; |
வேள்வியின் பகைஞன் -'யக்ஞவிரோதி' என்பதன் தமிழாக்கம். இதற்கு மந்திராலோசனை செய்தல் வேண்டாத ஒன்று என்பது வேள்விப் பகைஞன் கருத்தாகும். |
(44) |