மன்னா சிட்டர் செயல் செய்திலை - மன்னர் பெருமானே! நீ பெரியவர்கள் செய்யும் நல்ல காரியத்தைச் செய்தாயில்லை; குலச் சிறுமை செய்தாய் - நமது குலமாகிய புலத்திய மரபுக்கே சிறுமை உண்டாக்கும் செயலைச் செய்து விட்டாய்; மட்டு அவிழ் மலர்க் குழலினாளை - தேன் சிந்தும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய சீதையை; இனி விட்டிடுது மேல் - இனிமேல் இராமனிடம் செல்ல விட்டு விடுவோமானால்; நாம் எளியம் ஆதும் - நாம் வலிமையற்ற எளியவர்கள் என்றாகி விடும்; அவர் வெல்லப்பட்டிடுது மேல் - அந்த மானிடர்கள் போரில் நம்மை வெல்ல, நாம் இறந்து படுவோமாயின்; அதுவும் நன்று பழி அன்று - அதுவும் நல்லதே, நமக்குப் பழி உண்டாகாது. |
சிட்டர் - மேலோர் சிறுமை - கேவலம். மட்டு - தேன். அவிழ்தல் - பெருகுதல். படுதல்-இறந்துபடுதல். அவர்-இராமன் முதலோர் பிறன் மனைவியைச் சிறை கொண்ட பழி போரில் வீரமரணம் எய்துவதால் நீங்கும் என கும்பன் கருதினான் என எண்ணத் தோன்றுகிறது. அறநெறி உரைக்க முற்பட்ட கும்பகருணன் இராவணன் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டே வரும்போது தான் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்ற உடனே அவனுக்கேற்பத் தன் கருத்தை மாற்றிக் கொள்வது போல இப்பாடல் அமைந்துள்ளது. "மலர்க்குழலினாளை இனி மன்னா! விட்டிடு", என்று சொல்லிய கும்பன் இராவணனுக்கு அது பிடிக்காமல் முகம் கோணவே அவன் கருத்திற்கேற்ப "விட்டிடுதுமேல் எளியம் ஆவம்" என்று அந்தச் சொல்லைத் தொடர்ந்து மாற்றியது போல் கவிதை அமைத்தது கம்பனின் கவித்துவத்தைக் காட்டும் இடம் என்பது மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(53) |
6124. | 'மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால், |
| கரன் படை படுத்து, அவனை வென்று, களை |
| கட்டான்; |
| நிரம்பிடுவது அன்று, அதுவும்; நின்றது, இனி நம்பால் |
| உரம் படுவதே; இதனின்மேல் உறுதி உண்டோ? |
| |
மரன் படர் வனத்து - மரங்கள் அடர்ந்த காட்டிலே; ஒருவனே - இராமபிரான் ஒருவனாகவே;சிலை வலத்தால் - தனது வில்லின் வலிமையினால்; கரன் படை படுத்து - கரனுக்குத் துணையாக நின்ற சேனை முழுதும் அழித்து;அவனை வென்று - அந்தக் கரனையும் வெற்றி கொண்டு;களை கட்டான் - களையை |