பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 41

படைகள் எல்லாவற்றையும்; வேறு  பெயராத  வகை -   வேறு
இடங்களுக்குப்  பெயர்ந்து  செல்ல   இயலாதபடி;  வேரொடும்
அடங்க   நூறுவதே   கருமம்  
-  வேருடன் முழுவதையும்
அழித்தொழிப்பதே   நாம் செய்ய வேண்டிய செயலாகும்;என்பது
நுவன்றான்
- எனக் கூறினான்.
 

ஊறுபடை-பெருகி வரும் படை  (நமக்கு இடையூறு   செய்யும்
படை என்பது   பொருளாம்). நூறுதல் -அழித்தல். வேறு பெயராத
வகை-எங்கும் தப்பித்துச் சென்று விடாதபடி. அடங்க -முழுவதும்.
ஏறுகடல்-பெரிய கடல். ஏறி-கடந்து சென்று.
 

(56)
 

கும்பகர்ணன் பேச்சுக்கு இராவணன் இசைதல்
 

6127.

'நன்று உரை செய்தாய் !-குமர-!-நான் அது 

நினைந்தேன்;

ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம் 

கொன்று பெயர்வோம்; நமர் கொடிப் படையை

எல்லாம்,

"இன்று எழுக" என்க !' என இராவணன்

இசைத்தான்.

 

குமர ! நன்று உரை செய்தாய் - (இராவணன் கும்பகர்ணனைப்
பார்த்து) தம்பி ! நல்லதே சொன்னாய்; நான் அது  நினைந்தேன் -
நானும் அதைத்தான் நினைத்தேன்;ஒன்றும் இனி ஆய்தல் பழுது -
இனி ஒன்றும் ஆராய்வது தீமையாகும்; ஒன்னலரைஎல்லாம் - நமது
பகைவர்கள் எல்லோரையும்;கொன்று  பெயர்வோம் - அடியோடு
அழித்து மீள்வோம்;நமதுகொடிப்  படையை  எல்லாம்  -  நம்
அரக்கர்களின்  கொடிகளைத் தாங்கிய  படையை  எல்லாம்;இன்று
எழுக என்க
- இன்றே போருக்கு எழுக என ஆணை இடுவாயாக;
என இராவணன் இசைத்தான்
- என்று இராவணன் கூறினான்;
 

நமர்-நம்மவர். எழுக என்க-போருக்கு எழுக எனக் கட்டளை
இடுக என்பது பொருள். சிட்டர் செயல் செய்கிலை-குலச் சிறுமை
செய்தாய்  என்பன   போன்ற   கும்பகர்ணன் கூறிய உரைகளை 
விட்டுவிட்டு, "போருக்குப்   புறப்படலாம்"   நூறுவதுவேகருமம்
என்பதனை மட்டும்  கருத்தில்  கொண்டு  'நன்றுரை  செய்தாய்'
என்ற   இராவணனது  பண்பைப் புலப்படுத்திய முறை நினைந்து
போற்றத்தக்கது.
 

(57)