| 6140. | 'மூவரை வென்று, மூன்று உலகும் முற்றுறக் |
| காவலில்நின்று, தம் களிப்புக் கைம்மிக, |
| வீவது முடிவு என வீந்தது அல்லது, |
| தேவரை வென்றவர் யாவர், தீமையோர்? |
| |
மூவரை வென்று - மும்மூர்த்திகளையும் வென்று; மூன்று உலகம் முற்றுற - மூன்று உலகங்கள் முழுதும்; காவலில் நின்று - ஆட்சி புரிதலை மேற்கொண்டும்;தம் களிப்பு கைம்மிக - தம் செருக்கு எல்லை கடந்து மிகுவதால்;வீவது முடிவு என - இவர்கள் அழிவது உறுதி என்று கூறும்படி; வீந்த தல்லது - அழிந்த தல்லது; தேவரை வென்றவர் தீமையோர் யாவர் - தேவர்களை வென்று வாழ்ந்த கொடியவர்கள் யாருளர்? |
காவலில் நின்று-ஆட்சி புரிந்து வரும் காரியத்தை மேற்கொண்டு. களிப்பு-செருக்கு. கைம்மிக-எல்லை கடந்து செல்ல. |
(70) |
| 6141. | 'வினைகளை வென்று, மேல் வீடு கண்டவர் |
| எனைவர் என்று இயம்புகேன், எவ்வம் தீர்க்கையான்? |
| முனைவரும் அமரரும், முன்னும் பின்னரும், |
| அனையவர் திறத்து உளர் யாவர், ஆற்றினார்? |
| |
முனைவரும் அமரரும் - முனிவர்களும் தேவர்களும்; முன்னும் பின்னரும் - முற்காலத்தும் பிற்காலத்தும்;எவ்வம் தீர்க்கையான் - குற்றமான செயல்களை விட்டு விட்டமையால்; வினைகளை வென்று - இருவினைகளையும் வென்று;மேல் வீடு கண்டவர் - மேலான பரமபதத்தை அடைந்தவர்கள்; எனைவர் என்று இயம்புகேன் - எத்தனை பேர் என்று சொல்லுவேன்; அனையவர் திறத்து - அந்த அசுரர் முதலானவர்களுள்; யாவர் ஆற்றினார் உளர் - வீட்டின்பம் பெற்றவர் யாருளர்? |
முனைவர் - முனிவர்கள். எனைவர் - எவ்வளவினர். நல்வினை தீவினை இரண்டினுள் நல்வினையும் பிறப்புக்குக்காரணமாதலால் 'வினைகளை' வென்று என்றார். மேல்வீடு - உயர்ந்த வீட்டின்பம். எவ்வம்-குற்றம். |
(71) |
| 6142. | 'பிள்ளைமை விளம்பினை, பேதை நீ' என |
| ஒள்ளிய புதல்வனை உரப்பி, 'என் உரை |
| எள்ளலையாம்எனின், இயம்பல்ஆற்றுவென், |
| தெள்ளிய பொருள்' என அரசற் செப்பினான்: |