- மந்திரங்களாலும் சாகான்; தாதை தன்னைத்தான் தனிக் கொலை சூழினும் சாகான்- தன் தந்தையே அவனைத் தனித்துக் கொலை செய்யநினைத்தாலும் சாகமாட்டான்;ஈது அவன் நிலை - இதுதான் அந்த இரணியனது நிலைமை; எவ்வுலகங்கட்கும் இறைவன் - எல்லா உலகங்களுக்கும் அவனே இறைவனாவான்; |
வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்கள் புலன் உணர்வால் அறியக் கூடாதனவாம். மெய்யுணர்வால் மட்டுமே உணரத்தக்கன அவை. 'நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழிகாட்டுவிடும்' என்று குறள் கூறுமாறு இம்மந்திரச் சொற்கள் ஆக்கவும் அளிக்கவும் வல்லன. |
(18) |
இரணியனது மகன் பிரகலாதன் தன்மை |
| 6207. | 'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன், |
| தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான், |
| நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன், |
| தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு |
| தக்கோன். |
| |
ஆயவன் தனக்கு அருமகன்- அந்த இரணியனுக்கு அரிய ஒரு மைந்தன்; அறிஞரில் அறிஞன் - அறிவாளிகளில் சிறந்த அறிவாளி; தூயர் என்பவர் யாரினும் - தூயவர் என்று சொல்லப்படும் எவரைவிடவும்; மறையினும் தூயான் - வேதங்களை விடவும் தூயவன்; நாயகன் தனி ஞானி - எவ்வுயிர்க்கும் தலைவன், ஒப்பற்ற ஞானி; நல் அறத்துக்கு நாதன் - நல்ல அறங்களுக்குத் தலைவன்; மன்னுயிர்க்குத் தாயின் அன்பினன் - உலகத்து உயிர்களுக்குத் தாயினும் சிறந்த அன்புடையவனாய்; உளன் ஒரு தக்கோன் - மேலான தகுதியுடைய ஒருவனாக உள்ளான். |
'அருமகன் ஒரு தக்கோன் உளன்' என இயையும். ஆயவன் அத்தகையவனான இரணியன். தூயர் மன, மொழி, மெய்களால் தூயவர்களாய நல்லோர். தாயின் - தாயைவிடவும் (தாயினும் நல்லன்) |
'அறிஞரில் தூயோன்' (6234) எனப் பின்னரும் பிரகலாதன் குறிக்கப்படுவான். வீடணனை அறிஞரின் மிக்கான் (6169), 'மேதாவிகட்கெல்லாம் மேலான மேன்மையான்' (6364) எனக் கம்பர் குறித்துள்ளமை ஒப்பிட்டு உணரத்தக்கது. |
(19) |