பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 109

மனத்தையும் - நினைத்த மனத்தையும்;சுடும் என் ஒற்றை ஆணை
- சுட்டு அழிக்கும்   நிகரற்ற   எனது     தனியாணை;  மற்றுயார்
உனக்கு   இப்பெயர்   உரைத்தார்
- இருந்தும், உனக்கு இந்தப்
பெயரை யார் சொன்னார்கள்?;   கற்றது   ஆரோடு - எவரிடம்
கற்றறிந்தாய்?;சொல்லுதி விரைந்து - சீக்கிரம் பதில் சொல்; எனக்
கனன்றான்
- என்று சினந்து கூறினான்.
 

யான் உள நாள் - தவபலத்தால்   நான்   ஆட்சி   செய்யத் 
தொடங்கிய  நாளிலிருந்து -   "இப்பேர்"   பிரகலாதன்   கூறிய
திரு   நாமத்தை  இன்னதெனச் சொல்லாமல் வெறுப்புத் தோன்ற
'இப்பேர்'  என்றான்.   ஒற்றை ஆணை - ஒப்பற்ற ஆணை (ஏக
சக்ராதிபத்யம்) 'மற்று'  வினைமாற்றுப்  பொருள்.   கனன்றான் -
சினந்து கூறினான். தன் மகன் ஆதலின் குற்றத்தை  அவன்மேல்
ஏற்றாது பிறர்மேல் ஏற்றி, 'யார் உரைத்தார்',  'கற்றது  ஆரொடு'
என்று இரணியன் கூறியதாகக் கவிச்சக்கரவர்த்தி உரைத்த நயம்
உணர்க.  இவ்வாறு    பின்னும்   வரும்  இதுமகாவித்துவான்.
வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
 

(47)
 

6236.

' "முனைவர் வானவர் முதலினர், மூன்று உலகத்தும்

எனைவர் உள்ளவர், யாவரும், என் இரு கழலே

நினைவது; ஓதுவது என் பெயர்; நினக்கு இது நேர

அனையர் அஞ்சுவர்; மைந்த ! நீ யாரிடை அறிந்தாய்?

 

முனைவர்   வானவர்   முதலினர்  -   தேவர்களுக்குத்
தலைவர்களான  மூவரும்  மற்றுமுள்ள  தேவர்  முதலானோரும்;
மூன்று உலகத்தும்  எனைவர்   உள்ளவர்  யாவரும்
- இந்த
மூன்று  உலகங்களிலும்  வாழுகின்றவர்களான மற்ற எல்லோரும்;
நினைவது   என்   இரு   கழலே - எப்போதும்   நினைந்து
போற்றுவது    எனது   இரண்டு  பாதங்களையேயாம்;  ஓதுவது
என்பெயர்
- தினமும் ஓதுவதும் எனது பெயரையேயாம்;நினக்கு
இது நேர
- உனக்கு இந்தப் பெயரை நேர்ந்து சொல்ல;அனையர்
அஞ்சுவர்
- அந்த மூவரும்,  தேவரும், பிறகும் அஞ்சுவார்கள்;
மைந்த ! நீ யாரிடை  அறிந்தாய்
- மைந்தனே!  நீ   இந்தப்
பெயரை யாரிடம் அறிந்து கொண்டாய்?
 

நேர - உடன்பட்டுக் கூற. முனைவர் - முதல்வர் (அயன், அரி,
சிவன் ஆகிய மூவர்). எனைவர் - எத்தனை பேர்.
 

(48)