பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 185

அப்பரமனது படைப்புக்கும் உறுதுணையாய் விளங்குபவள் என்பதால்
'உலகும் உயிரும் தந்தாள்' என்றார்.
 

(164)
 

6353.

'தீது இலாஆக உலகு ஈன்ற தெய்வத்தைக்

காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள்

ஓதினார், சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும்,

நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்.
 

தீது   இலாஆக-    எவ்வுயிர்க்கும்    எந்தத்   தீமையும்
இல்லாதிருக்க; உலகு ஈன்ற தெய்வத்தை- இவ்வுலகனைத்தையும்
ஈன்றுதவிய    தெய்வத்தை;      காதலால்    நோக்கினான்-
(சிங்கப்பிரான்)  காதலோடு   பார்த்தருளினான்; கண்ட  முனிக்
கணங்கள்
- இதைப் பார்த்த முனிவர்  கூட்டமெல்லாம்;  சீர்த்தி
ஓதினார்
- எம்பெருமானுடைய மிகு புகழைக் கூறி  வாழ்த்தினர்;
உயர்ந்த   பரஞ்சுடரும்  -   உயர்வற   உயர்ந்த   மேலான
ஒளிமயமாக விளங்கும் பரமனும்;  ஆங்கு  நோதல்  இல்லாத
- அங்கே      தனது    தந்தையை      இழந்தும்    சிறிதும்
மனவருத்தமில்லாதிருந்த;    அன்பனையே    நோக்கினான்-
மெய்யன்புடைய பிரகலாதனையே பார்த்தான்.
 

தீமை   எதுவும்   இல்லாததாக   உலகத்தை     எல்லாம்
படைத்துக்காத்து  வருவதற்குப்   பேருதவியாய்    இருப்பவள்
என்பதால்  'உலகீன்ற தெய்வம்' என்றார்.  கருதரிய  கடலாடை
உலகுபலவண்டம் கருப்பெறாது 'ஈன்ற கன்னி'  என்றார் பிறரும்.
காதல் -  பேரருள்  சீர்த்தி -  மிகுபுகழ்   'பயிலும்  சுடரொளி
மூர்த்தி' எனவும் 'பரஞ் சோதி' எனவும்  'பரஞ்சுடர்  உடம்பாய்'
எனவும்  திருவாய்  மொழி   அருளிச்  செய்தாங்கு   'உயர்ந்த
பரஞ்சுடர்' என்றார். இறைவன்  'பேரொளி  வடிவினன்'  என்பது
கருத்து தந்தையை இழந்த நிலையிலும் சிறிதும் மனம் வருந்துதல்
இன்றி  இருந்த  பிரகலாதனை  "நோதல்   இல்லாத   அன்பன்"
என்றார். அன்பனையே ஏகாரம் பிரி நிலை.
 

(165)
 

பிரகலாதனை நோக்கி சிங்கப் பெருமான் இயம்பிய அருள்மொழி
 

6354.

' "உந்தையை உன்முன் கொன்று; உடலைப் பிளந்து

அளைய,

சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய் !

அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய் !

அளியத்தாய் !

எந்தை ! இனி இதற்குக் கைம்மாறு யாது ?" என்றான்.