6370. | 'நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை; |
| எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு |
| உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை; |
| திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ? |
|
நண்ணின மனிதர் பால் - (இங்கு போரிடப்படை யெடுத்து வந்து) அடைந்த மானிடர்களிடம்; நண்பு பூண்டனை - நட்புடையவனாய் இருக்கிறாய்; செய்வினை எண்ணினை - (நீ செய்ய வேண்டிய செயல்களை) எண்ணி முடிவு செய்து விட்டாய்; என்னை வெல்லுமாறு உன்னினை- என்னைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தாய்; அரசின் மேல் ஆசை ஊன்றினை- இலங்கை ஆட்சியின் மேல் ஆசையில் ஊன்றி உள்ளாய்; உன் செயல் திண்ணிது- உனது செயல்கள் வன்மை மிக்கது; பிறர் செறுநர் வேண்டுமோ- வேறான பிற பகைவர்களும் வேண்டுமோ ? |
ஊன்றுதல் - நிலைத்திருத்தல். செறுநர் - பகைவர். 'நீயே போதுமே வேறு பிற பகையும் வேண்டுமோ' என்பது கருத்து. |
(6) |
6371. | 'அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள்அலை; |
| தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை; |
| வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை; |
| நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ ? |
|
அஞ்சினை ஆதலின்- அந்த மானிடருக்கு நீ பயந்துவிட்டாய் ஆதலால்; அமர்க்கும் ஆன் அலை- அவருடன் போரிடுவதற்கும் ஏற்ற ஆளல்ல; தஞ்சு என- அடைக்கலம் என்று; மனிதர் பால் வைத்த சார்பினை - மனிதர்களிடம் கொண்ட பற்று உடையவனாய் விட்டாய்; வஞ்சனை மனத்தினை- வஞ்சகமுடைய மனத்தை உடையவனாயுள்ளாய்; பிறப்பு மாற்றினை- நமது அரக்கப் பிறப்புக் குரிய பண்பிலிருந்து மாறிவிட்டாய்; நஞ்சினை உடன் கொடு - கொடியவிடத்தை உடன் வைத்துக் கொண்டு; வாழ்தல் நன்மையோ- வாழ்வதால் நன்மை உண்டாகுமோ? |
பகைவரைப் பற்றி அஞ்சாதவர்களே அமருக்கு உரியவர்கள் என்பதால் 'அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அல்லை" என்றான். தஞ்சு - புகலிடம். அரக்கர்க்குரிய இயல்புகள் எதுவும் இல்லாத நீ உனது பிறப்பையே மாற்றிக் கொண்டாய் என்பான் "பிறப்பு மாற்றினை" என்றான். "நீதியால் வந்த தொரு நெடுந்தரும நெறியல்லால் சாதியால் |