நல்வினை உடைய நான்கு பேரும்; விரைவில் வந்தனர்- விரைந்து வீடணனிடம் வந்தனர்; கனை கழல் காலினர்- வீரக் கழல் அணிந்த கால்களை உடையவர்களும்; கருமச் சூழ்ச்சியர் - ஆராய்ந்து செயல்படும் தகுதி உடையவர்களும்; இனைவரும்- ஆகிய இத்தகைய அவர்கள்; வீடணனோடும் ஏயினர்- வீடணனுடன் சேர்ந்து கொண்டனர். |
ஆராய்ந்து செயல்படத்தக்க நற் பண்பு கொண்டவர்கள் என்பதால் 'கருமச் சூழ்ச்சியர்' என்றார். |
அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரும் வீடணனுடைய அமைச்சர்கள். வீடணன் இலங்கை விட்டுப் போன போதும் அவனை விட்டுப் பிரியாதவர்களாக, அவனுடன் சேர்ந்து கொண்டனர் என்பதனை 'வீடணனோடும் ஏயினார்' என்றார். |
(13) |
6378. | அரக்கனும், ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும், |
| 'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க் |
| கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில், |
| 'பொருக்கென எழுதும்' என்று எண்ணிப் போயினார். |
|
அரக்கனும்- அரக்கரினத்தில் பிறந்தவனான வீடணனும்; ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்- அவனுடைய அமைச்சர்கள் நால்வரும் அப்போது; 'குரக்கு இனத்தவரொடும்- வானரப் படையுடனே; மனிதர் - மனிதர்களான இராமனும், இலக்குவனும்; வந்து இறுத்தனர் - வந்து தங்கியிருக்கிறார்கள்; என்ற காலையில் - என்னும் பொழுது; பொருக்கென எழுதும் - விரைந்து அங்கு எழுந்து போவோம்; என்று எண்ணிப் போயினார் - என்று எண்ணியவர்களாகச் சென்றனர். |
ஆங்கண் - அப்போது. 'கொள்ளை நீர்' - கடல். 'உத்தமன்' என முன்பு கூறியவர் நல்ல பண்புள்ளவனாயினும் அரக்கர் இனத்தில் பிறந்தவன் என்பதைக் குறிப்பிட வீடணனை 'அரக்கன்' என்றார். |
(14) |
வீடணன் வானரத்தானையைக் கண்டு வியத்தல் |
6379. | அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும், |
| விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல் |
| வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என, |
| களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான். |