அளக்கரைக் கடந்து - அந்தக் கடலைக் கடந்து வடகரையை அடைந்து; மேல் அறிந்து - மேலே நடந்ததனை அறிந்து (முன்பு நடந்தது); நம்பியும்- இளவலாகிய வீடணனும்; விளக்கொளிபரத்தலின்- கடற்கரை முழுதும் விளக்குகளின் ஒளிபரந்திருப்பதால்; பாலின் வெண் கடல்- வெண்மை நிறமான பாற்கடல் மீது; வளத்தடந்தாமரை- அழகிய அகன்ற செந்தாமரை மலர்கள்; மலர்ந்தாம் என - மலர்ந்துள்ளது போல (காட்சிதந்த); களப்பெரும் தானையை - போர்க்களத்துக்குச் செல்லும் அந்தப் பெரிய வானரப் படையை; கண்ணின் நோக்கினான் - கண்களால் பார்த்தான். |
அளக்கர் - கடல். வளம் - அழகு. கடலைக் கடந்து, வட கரையை அடைந்த வீடணன் முன்பு நடந்ததை அறிந்து. பாற்கடலிலே தாமரை மலர்ந்தது போல, வெண்மை நிறம் உடைய வானரப் படை தங்கியுள்ள அவ்விடத்திலே விளக்கொளிபரவியிருத்தலைத் தனது கண்களால் பார்த்தான் என்பது கருத்து. |
(15) |
6380. | 'ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும் |
| ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால், |
| வானரம் பெரிது' என, மறு இல் சிந்தையான், |
| தூ நிறச் சுடு படைத் துணைவர்ச் சொல்லினான்: |
|
ஊன் உடை உடம்பின- (இவ்வுலகெங்கும் வாழும்) ஊன் மிக உடைய உடம்பினை உடைய; உயிர்கள் யாவையும் - உயிரினங்கள் எல்லாவற்றையும்; ஏனைய ஒருதலை நிறுத்தி - மற்றொரு பக்கம் நிற்கச் செய்து; எண்ணினால் - எண்ணுவோமானால்; வானரம் பெரிது என- வானரப் படையே அளவில் பெரியதாயிருக்கும் என்று; மறு இல் சிந்தை யான்- குற்றமற்ற மனமுடையவனாகிய வீடணன்; தூநிறச் சுடு படை- புலால்மணம் வீசு கொடிய படைக்கலங்களை உடையவர்களான; துணைவர்ச் சொல்லினான்- தனது அமைச்சர்களுக்குக் கூறினான். |
தூ - தசை (புலால்) நிறம் - (இங்கு) மணம். |
(16) |
6381. | 'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்; |
| மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்; |
| "பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத் |
| துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான். |