6386. | 'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது; |
| தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும் |
| நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து |
| ஏயது முடித்தும்' என்று இனிது மேயினான். |
|
ஆயது பயப்பது - அந்த பிரமன் தந்தவரம் நன்மை தருதற்குரிய; ஓர் அமைதி ஆயது- ஒரு நல்லகாலம் ஆயிற்று; நினைந்தது தூயது- நீங்கள் நினைந்து கூறியதே தூய்மையானது; தொல்லை யாவர்க்கும் நாயகன்-பழமையான, எல்லோருக்கும் தலைவனான இராமபிரானது; மலர்க்கழல் நணுகி-மலர் போன்ற பாதங்களை அடைந்து; நம் மனத்து ஏயது முடித்தும்- நமது மனத்துக்குப் பொருந்தியதனைச் செய்து முடிப்போம்; என்று இனிது மேயினான் - என்று கூறி இனிதே இருந்தான். |
ஆயது - அந்தப் பிரமன் தந்த வரம். ஓர் அமைதி - ஒரு தகுந்த சமயம். தொல்லை நாயகன் யாவர்க்கும் நாயகன் எனக் கூட்டி உணர்க. தொல்லை - பழமை. ஏயது - பொருந்தியது. |
(22) |
6387. | 'இருளிடை எய்துவது இயல்பு அன்றாம்' என, |
| பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் |
| கேள்வியார், |
| மருளுறு சோலையின் மறைந்து வைகினார்; |
| உருளுறு தேரவன் உதயம் எய்தினான். |
|
இருளிடை எய்துவது- இருள் நிறைந்த இந்த இரவு நேரத்திலே அங்கு சென்று அடைவது; இயல்பு அன்றாம் என- (புதியவர்களாகிய நமக்கு) இயல்பாகாது என்று; பொருள் உறஉணர்ந்த- பொருள் பொருந்திய தன்மையை அறிந்து உணர்ந்தவர்களான; அப்புலன் கொள் கேள்வியார்- அறிவமைந்த கேள்வி ஞானம் உடைய வீடணன் முதலியோர்; மருள்உறு சோலையின் - இருள் நிறைந்த ஒரு சோலையிலே; மறைந்து வைகினார்- பிறர் எவரும் அறியாதபடி இரவுமுழுதும் மறைந்து தங்கியிருந்தார்கள்; உருள் உறு தேரவன் - ஒற்றையாழித் தேரை உடையவனாகிய சூரியன்; உதயம் எய்தினான்- உதயகிரியை அடைந்தான். |
பொருள் உற உணர்ந்த - உலகியல்பை உணர்ந்த. உருள்- சக்கரம் உருள் உடைத் தேரவன் - ஒற்றைச் சக்கரத் தேரை உடைய சூரியன். |
(23) |