பக்கம் எண் :

206யுத்த காண்டம் 

இராமபிரான் கடற்கரைப் பகுதிகளைக் காணல்
 

6388.

அப் புறத்து, இராமன், அவ் அலங்கு வேலையைக்

குப்புறக் கருதுவான், குவளை நோக்கிதன்

துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான்,

இப் புறத்து இருங் கரை மருங்கின் எய்தினான்.

 

அப்புறத்து- அடுத்த பகுதியான அந்த இடத்திலே; இராமன்-
இராமபிரான்; அவ்அலங்கு வேலையை- அந்த அலை வீசுகின்ற
தென் கடலை; குப்புறக்  கருதுவான்- தாண்டி,  மறுகரை  சேர
நினைப்பவன்;  குவளை நோக்கிதன்- குவளை  மலர்  போன்ற
கண்களை  உடைய சீதா  பிராட்டியின்;  துப்பு  உறச்  சிவந்த
வாய்-   பவளம்   போன்ற    சிவந்த    வாயை;  நினைந்து
சோர்குவான் -  எண்ணி,  மனம்  சோர்ந்தவனாக;  இப்புறத்து
இருங்கரை-  கடலில்    இப்புறமான    வடபுறத்தின்   பெரிய
கரையின்;   மருங்கின்   எய்தினான்-   பக்கத்தில்   சென்று
சேர்ந்தான்.
 

அலங்குதல் -  அலைவீசுதல்.  குப்புறக்கருதுதல் -  தாண்டி
அப்பாற் செல்ல நினைத்தல். துப்பு - பவளம்.
 

(24)
 

6389.

கானலும் கழிகளும், மணலும், கண்டலும்,

பானலும் குவளையும், பரந்த புன்னையும்,

மேல் நிறை அன்னமும் பெடையும், வேட்கை கூர்

பூ நிறை சோலையும், புரிந்து நோக்கினான்.+

 

கானலும்-    கடற்கரைச்    சோலையும்;    கழிகளும்-
உப்பங்கழிகளும்; மணலும் -கடற்கரை மணலும்; கண்டலும் -
தாழைப்புதர்களும்; பானலும்  குவளையும்- கருநெய்தலும்,
குவளை   மலரும்;  பரந்த  புன்னையும்  -   கடற்கரையில்
பரந்துள்ள  புன்னை  மரங்களும்; மேல்நிறை அன்னமும் -
அந்தப் புன்னை மரங்களின் மேல் நிறைந்திருக்கும்  அன்னப்
பறவைகளும்; பெடையும்- பெண் அன்னங்களும்; வேட்கை
கூர் பூநிறை
  சோலையும் -  காண்போர்  விரும்பும்  மலர்
நிறைந்த   சோலைகளும்;     புரிந்து    நோக்கினான் -
ஆகியவைகளை   எல்லாம்   இராமபிரான்   விருப்பத்துடன்
பார்க்கலானான்.
 

கானல் - கடற்கரைச் சோலை. கண்டல் - தாழை. பானல்
கரு நெய்தல்.
 

(25)