பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 209

கண்டு  நின்று -   காத்திருந்ததைப்   பார்த்து   அங்குநின்று;
இரக்கம்எய்தினான்- இராமபிரான் இரக்கம் கொண்டான்.
 

(29)
 

6394.

ஒரு தனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்,

பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில,

திருகு வெஞ் சினத்தன, தெறு கண் தீ உகப்

பொருவன கண்டு, தன் புருவம் கோட்டினான்.

 

ஒருதனிப் பேடை மேல் - தனியாக  நின்ற  ஒருபெண்
நாரையிடம்;  உள்ளம்  ஓடலால்-   மனம்   செல்லுதலால்;
பெருவலிவயக்குருகு இரண்டும் - பெரிய  வலிமை  மிக்க
இரண்டு ஆண் நாரைகள்; பேர்கில திருகு வெஞ்சினத்தன-
அந்த இடத்தை விட்டுப்பெயராதனவாய், மிகுந்த  சினத்துடன்;
தெறுகண்  தீஉக-    கண்கள்    நெருப்புப்   பொறிசிந்த;
பொருவனகண்டு  -  அந்த  ஆண்   நாரைகள்   தமக்குள்
போரிடுவதைக்   கண்டு;   தன்  புருவம்  கோட்டினான்-
இராமபிரான்  கோபத்தால்   தனது  புருவத்தை  வளைத்துப்
பார்த்தான்.
 

ஒரு  பெண்   நாரையை  அனுபவிப்பது   யார்   என்ற
போட்டியில்   ஆண்    நாரைகள்   போரிடுதல்  அறமன்று
என்பதால், சீதையைக் கவர்ந்து சென்று  சிறை  வைத்திருந்த
இராவணனது  கொடுஞ்செயல்   நினைவுக்கு  வர,  இராமன்
கோபம் கொண்டு புருவத்தை வளைத்தான் என்க.
 

(30)
 

6395.

உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்

கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்,

தண் நிறப் பவள வாய் இதழை, தற் பொதி

வெண் நிற முத்தினால், அதுக்கி, விம்மினான்.

 

உள் நிறை ஊடலில் - பெண் அன்னத்தின் உள்ளத்தில்
நிறைந்த ஊடலில்; தோற்ற ஓதிமம்- தோற்று, பணிந்த ஆண்
அன்னம்; கண்ணுறு கலவியில்-  இரண்டு  உடம்பும்  ஒன்று
பட்டு மகிழ்ந்த கலவி இன்பத்திலே;வெல்லக்  கண்டவன்-
ஆணன்னம் வெற்றி  கொண்டதைக் கண்ட ராமபிரான்;  தண்
நிறப்பவளவாய் இதழை-  குளிர்ந்த பவளம் போன்ற  தனது
வாயின் உதடுகளை; தற்  பொதி  வெண்  நிறமுத்தினால்-
அந்த  இதழ்களால்  மறைக்கப்   பட்டுள்ள   வெண்மையான
முத்துப் போன்ற பற்களால்; அதுக்கி விம்மினான் - மெல்ல
அழுத்தி விம்மினான்.