'ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும், கூடலில் காணப்படும்' என்னும் குறள் (1327) ஒப்பிடத்தக்கது. |
(31) |
சுக்கிரீவன் முதலியோர் சொற்களால் இராமபிரான் மெலிவு நீங்குதல் |
| 6396. | இத் திறம் எய்திய காலை, எய்துறும் |
| வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் |
| ஒத்தனன் இராமனும், உணர்வு தோன்றிய |
| பித்தரின், ஒரு வகை பெயர்ந்து போயினான். |
| |
இத்திறம் எய்திய காலை- இராமன் இத்தன்மையை அடைந்த போது; எய்துறும் வித்தகர் - அங்கு வந்த சுக்கிரீவன், அனுமன் முதலிய அறிவு மேம்பட்ட வித்தகர்கள்; சொற்களால்- கூறிய ஆறுதல் மொழிகளால்; மெலிவு நீங்கினான் ஒத்தனன் இராமனும் - இராமபிரான் மெலிவு நீங்கப்பெற்றவனை ஒத்தவனாயினான்; உணர்வு தோன்றிய பித்தரின் - சிறிது நல்லுணர்வு தோன்றிய பித்தர்களைப் போல; ஒருவகை பெயர்ந்து போயினான் - அங்கிருந்து நீங்கி ஒருவாறு வேறிடம் சென்றான். |
(32) |
வீடணன் வருகை |
| 6397. | உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின் |
| துறை அறி துணைவரோடு இருந்த சூழலில், |
| முறை படு தானையின் மருங்கு முற்றினான்- |
| அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான். |
| |
உறைவிடம் எய்தினான்- இராமபிரான் தான் தங்கியிருக்கும் பாசறையை அடைந்தான்; ஒருங்கு கேள்வியின் துறை அறிதுணைவனோடு - ஒரு சேர, நல்ல நூல்களை கேட்டறிந்த துணைவர்களான சுக்கிரீவன் முதலியவர்களோடு; இருந்த சூழலில்- இராமபிரான் அமர்ந்திருந்த அந்த இடத்துக்கு; அயிர்ப்பு இல் சிந்தையான்- எவ்வித ஐயமுமில்லாத மனத்தினனாகிய; அறை கழல் வீடணன்- ஒலிக்கின்ற கழல் அணிந்த கால்களை உடைய வீடணன்; முறை படுதானையின் மருங்கு முற்றினான்- முறையாக அங்கு தங்கியிருந்த வானரப் பக்கத்திலே சேர்ந்தான். |