பக்கம் எண் :

43   யுத்த காண்டம்

நேர்ந்தது. கும்பகர்ணன்,  வீடணன் என்ற இருவரிடையே உள்ள
வேறுபாட்டை,  அணுகுமுறையை  வாழ்வின்  குறிக்கோள்களை
இதுவரை கண்டோம்.
 

குறிக்கோள்களும்,    அணுகுமுறையும்      வெவ்வேறாக
ஆகிவிட்டமையின்    இருவரும்      வெவ்வேறு   வழிகளில்
சென்றுவிட்டனர்.    சாரமற்ற   தன்   வாழ்க்கைக்கு மரணமே
சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற   ஒருவன்    கையால்
இறப்பது     புகழுடைய    செயலே    என்கிறான்   கும்பன்.
போர்க்களத்தில்     வீடணனைச் சந்தித்த கும்பன்,  "புலையுறு
மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்" எனக் கூறிவிடுகிறான்.
அண்ணன்    பொருட்டாகத்    தன் அழிவை இரு கரம் நீட்டி
வரவேற்கத்    துணிந்துவிட்டான்    கும்பன்.  எந்த வகையில்
பார்த்தாலும்   அவன்மேல் குற்றம் சொல்ல வழியே    இல்லை.
உண்டவர்குரியது   என்ற    ஒரு சட்டத்தை வகுத்துக்கொண்டு,
அந்த வளையத்துள் இருந்து வெளிவர மறுக்கிறான்: இதனாலேயே
கவிஞன்,      கும்பனுடன்     போர்தொடங்கிய      இராமன்
பற்றிக்கூறவரும்பொழுது "வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்"
(7621) என்று கூறுகிறான். அப்பழுக்கற்ற   மாபெரும்   ஆற்றல்
வடிவான கும்பன் நன்றிக்கடன் என்ற  ஒன்றிற்காகவே இறக்கத்
துணிந்து போர்க்களம் வந்த ஒரு மாவீரன் என்பதை அறிந்ததும்
இராமன் கைகள் நடுங்கின என்கிறான் கவிஞன்.
 

மானம் என்பதுபற்றி இராவணன் அடிக்கடி பேசினானே தவிர
அதனைப் பெரிதாகப்   போற்றியதாகத்  தெரியவில்லை. ஆனால்,
கும்பகர்ணன் மானம் என்பது பற்றி    அதிகம்  பேசாவிட்டாலும்
சந்தர்ப்பம் வரும்பொழுது மானத்தைப் பெரிதாக    நினைக்கிறான்.
இறக்கப்போகும் தறுவாயில் தன் முகத்தில்   மூக்கு இல்லாமையை
உணர்ந்து, இராமனைப் பார்த்து,
  

"மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்..............................................................................."

(7628)
 

என்று  வரம்  வேண்டுகிறான். இறந்த பிறகுகூடத் தன் உடலைப்
பார்த்து யாரும்  எள்ளி நகையாடிவிடக்கூடாது என்று நினைக்கும்
கும்பகர்ணனின் மான உணர்ச்சி நம்மை