தன்னைக் கனல் எழக் கலக்கக் கண்டும்- (பாற்கடல்) தன்னை நெருப்பு எழும்படி தேவாசுரர்கள் கலக்குவதைப் பார்த்தும்; ஆர்கலி அமரர் உய்ய -பாற்கடலானது தேவர்கள் உய்யுமாறு; அமுது பண்டு அளித்ததன்றே- தேவாமுதத்தை முன்பு கொடுத்ததல்லவா? |
தீர்வரும்-தீர்க்கமுடியாத. கார்வரை-கரியமலை (மந்தரமலை). 'செய்ய சிந்தைப் பேரருளாளர்' என்றது இராமனைப் போன்றவர்களைச் சுட்டி நின்றது. தீர்த்தற்கரிய துன்பத்தைப் பிறர் செய்தாலும் அருளாளர்கள் தங்கள் செய்கையில் பிழையார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வர் என்பதால் 'செய்கையின் பிழைப்பதுண்டோ' என்றான். பாற்கடல் வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி கனல் எழக் கடைந்த போதும், கடைந்த தேவர்கள் உய்வு பெற இராவணன் தம்பி என்றாலும் அடைக்கலம் தந்து காக்க முன்வந்தான் எனப் பாற்கடலுக்கு இராமனை உவமையாக்கிக் கூறினானென்க. இது எடுத்துக்காட்டுவமை. |
(125) |
6490. | 'துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் |
| என்னை |
| உறவு உவந்து அருளி, மீளா அடைக்கலம் |
| உதவினானே! |
| அற வினை இறையும் இல்லா, அறிவு இலா, |
| அரக்கன் என்னும் |
| பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும், நரகினின் |
| பிழைப்பதானேன்.' |
| |
துறவியின் உறவுபூண்ட- துறவறத்தைத் தமக்குரிய அறமாக ஏற்றுக்கொண்ட; தூயவர் துணைவன்- தூயமுனிவர்களின் துணைவனான ராமன்; என்னை உறவு உவந்தருளி - என்னை உறவாக மிகவும் உவந்தருளி; மீளா அடைக்கலம் உதவினானே - எனக்கு மீளாத அடைக்கலத்தைக் கொடுத்துதவினான்; அறவினை இறையுமில்லா- சிறிதும் அறச்செயல்களைச் செய்யாத; அறிவு இலா - நல்லறிவும் இல்லாத; அரக்கன் என்னும் பிறவியின்- அரக்கர் என்னும் பிறவியில் இருந்து; பெயர்ந்தேன்- பெயர்ந்து, உயர் பிறவியனானேன்; பின்னும் நரகினின் பிழைப்பதானேன் - மேலும் நரகத்தை அடைவதிலிருந்தும் தப்பிவிட்டேன். |