மின்மினிப் பூச்சியின் ஒளி தோன்றிய உடனே மறையும் தன்மை உடையது. 'பிறவி' என்பதும் இதுபோலத்தான் என்பான். 'மின்மினி ஒளியின் மாயும் பிறவி' என்றான். இராமபிரான் திருமாலின் அவதாரமாதலின் அவன் சரணம் தாழ, பிறவி நோய் அடியோடு தீரும் என்பான். 'பிறவியை வேரின் வாங்க' என்றான். தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்து வந்தவன் பரதன் என்பதால் 'மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன்" எனப் பரதனைச் சிறப்பித்தான். 'செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே" என்பார் மேலோர். இராமபிரான் திருவடிகளைச் சிரத்தில் சூடி, மேலான செல்வம் எய்திய பரதனை. 'செல்வன்' என்றது குறிப்பிடத்தக்கதாகும். பிறவித் துன்பம் அடியோடு நீங்க, இராமபிரான் திருவடிகளை நான் சேரச் செய்த என் முன்னோன் எனக்குப் பேருதவி செய்தான் என்று கூறி மகிழ்ந்தவன், 'எம்முனார் எனக்குச் செய்த உதவி' என்றான். |