இராமபிரான் வீடணனுக்கு இலங்கை அரசை அளித்தல் |
6503. | ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை |
| கூர, |
| 'ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் |
| எந் நாள் |
| வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று அரக்கர் |
| வைகும் |
| தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்' |
| என்றான். |
| |
ஆழியான் அவனை நோக்கி- ஆணையாகிய சக்கரத்தை உடைய இராமபிரான் வீடணனைப் பார்த்து; அருள் சுரந்து - உள்ளத்திலே கருணை பொங்க; உவகை கூறி - மகிழ்ச்சி மிக; ஏழினோடு ஏழாய் நின்ற உலகும்- ஏழுடன் ஏழாகிய பதினான்கு உலகங்களும்; என் பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று காறும் - எனது பெயரும் எத்தனை காலம் இருக்குமோ அக்காலம் வரை; வாள் எயிற்று அரக்கர் வைகும்- ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர்கள் வாழும்; தாழ்கடல் இலங்கைச் செல்வம் - ஆழமான கடல் நடுவே உள்ள இலங்கையின் அரசுச்செல்வம்; நின்னதே தந்தேன் என்றான் - உனக்கே உரிமையுடையதாகக் கொடுத்தேன் என்று கூறினான். |
ஆழியான்-இராமன். சக்கரப் படையையுடைய திருமாலின் அவதாரம் என்பதால் இவ்வாறு கூறினார் என்றுமாம். உலகுள்ள காலம் வரை இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்று தருவதற்குத் தகுதியுடையவன் என்பது தோன்ற 'ஆழியான்' என்றார். இதன் கண் கூறப்படும் நிகழ்ச்சி 'கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" என்னும் புறத்திணையுள் அடங்கும். 'இராமபிரான் திருவருளே வீடணனுக்கு வேண்டுவது இலங்கை அரசோ வந்தேறியானது' என்பது பெரியோர் கருத்து. இலங்கை அரசனான இராவணனை வெல்லுவதற்கு முன்பே இலங்கையை இராமபிரான் வீடணனுக்குத் தந்தான் என்பது வெல்லுதல் உறுதியாதலால் என்க. இராமபிரானது பேராற்றலைக் காட்டும். அன்றுகாறும்-அந்த நாள்வரை. வாள்-ஒளி. இராமபிரானுக்கு அருள்சுரத்தல் இயல்பு. காத்தற்கடவுளின் அவதாரமாய் அடைக்கலம் அருளலால் எடுத்த பிறப்புக்கு உரிய வெற்றி கிட்டுதலின். இவ்விரண்டும் புலப்பட அருள் சுரந்து உவகை கூற என்றார். |
(139) |