6504. | தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ? |
| சிறப்புப் பெற்றான் |
| கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ? |
| யாது கொல்லே?-- |
| வார்த்தை அஃது உரைத்தலோடும், 'தனித் தனி |
| வாழ்ந்தேம்' என்ன |
| ஆர்த்தன, உலகில் உள்ள சராசரம் அனைத்தும் |
| அம்மா! |
| |
வார்த்தை அஃது உரைத்தலோடும்- இராமபிரான் (இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்) என்ற அந்த வார்த்தைகளைச் சொன்னவுடன்; உலகிலுள்ள சராசரம் அனைத்தும்- உலகத்தில் வாழும் சரம் அசரம் ஆகிய எல்லாவிதமான உயிரினங்களும்; தனித்தனி வாழ்ந்தோம் என்ன ஆர்த்தன - ஒவ்வொன்றும் தனித்தனியே நாம் வாழ்வு பெற்றோம் என ஆர்ப்பரித்தன; தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ - இராமபிரானது திருவருளை எண்ணி மகிழ்ச்சி அடைந்ததாலோ; சிறப்புப் பெற்றான் - இராமபிரானைச் சரணடைந்து மேலான சிறப்பைப் பெற்ற வீடணனுடைய; கூர்த்த நல் அறத்தை நோக்கி - மிகுந்த நல்லறத்தை எண்ணிப் பார்த்து; குறித்ததோ யாது கொல்லோ - செய்ததோ யாதென அறியோம். |
தீர்த்தன் - இராமபிரான்; தான் தூயனாய் இருப்பதோடு, தன்னை அடைந்தாரையும் தூயராக்கவல்லவன் என்பது பொருள். சரம் - இயங்கியற்பொருள். அசரம் - நிலையியற் பொருள். இராமபிரானுடைய அருட்பண்பை நோக்கி உலகம் 'வாழ்ந்தேம்' என மகிழ்ந்தது என்பதா? அந்தத் திருவருளைப் பெற்று உயர்ந்து சிறந்த வீடணன் நிலைக்கு மகிழ்ந்தது என்பதா? எனவே, 'யாது கொல்லோ' என்ற ஐயப்பாட்டால் கூறினார். இவ்விரண்டுமே உலகத்தவர் மகிழ்ந்து ஆரவாரம் செய்ததற்குக் காரணம் என்க. |
(140) |
6505. | 'உய்ஞ்சனென் அடியனேன்' என்று ஊழ்முறை |
| வணங்கி நின்ற |
| அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி, |
| 'தஞ்ச நல் துணைவன் ஆன தவறு இலாப் |
| புகழான்தன்னை, |
| துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம்' |
| என்றான். |