| 'இவ்வழி வருதி' என்று இயம்ப, எய்தினான்- |
| வெவ் வழி விலங்கி, நல் நெறியை மேவினான். |
| |
அல்வழி உணர்வு வந்து- அப்பொழுது, தன்னுணர்வு வரப்பெற்று; அயர்வு நீங்கினான் - மனத்துயர் நீங்கியவனான இராமபிரான்; செவ்வழி அறிஞனைக் கொணர்மின் சென்றென- நன்னெறி நின்று ஒழுகும் அறிஞனான வீடணனை அழைத்து வருக என வானர வீரர்களுக்குக் கட்டளை இட; இவ்வழி வருதி என்று இயம்ப - (சென்ற வானரவீரர்கள் வீடணனை அடைந்து) இராமபிரானிடம் வருக என்று கூற; வெவ்வழிவிலங்கி நல்நெறியை மேவினான் - தீய நெறியிலிருந்து நீங்கி, நல்லநெறியைக் கடைப் பிடிப்பவனாகிய வீடணன்; எய்தினான் - இராமபிரான் இருக்குமிடத்தை அடைந்தாள். |
இராமபிரான் அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன்' என்றொரு பெயர் சூட்டிய திருவாயால் வீடணனை "செவ்வழி அறிஞன்" என்றது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் கூற்றாகப் போற்றிக் கூறியது போதாதென்று கவிக் கூற்றாகவும் 'வெவ்வழி விலங்கி நன்னெறியை மேவினான்" என்றது குறிப்பிடத்தக்கது. |
(14) |
இலங்கை பற்றி இராமன் வினவ வீடணன் விடை பகர்தல் |
6530. | 'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி |
| வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும், |
| தார் கெழு தானையின் அளவும், தன்மையும், |
| நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான். |
| |
ஆர்கலி இலங்கையின் அரணும் - கடல் சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும்; அவ்வழி வார் கெழு கனைகழல் அரக்கர் வன்மையும்- அங்கு நீண்டு ஒலிக்கும் வீரக் கழல் அணிந்தவர்களான இராவணன் முதலிய அரக்கர்களின் வலிமைபற்றியும்; தார் கெழு தானையின் அளவும் தன்மையும் - வெற்றி மாலை பொருந்திய இலங்கைப் படையின் அளவு பற்றியும் தன்மை பற்றியும்; நீர் கெழு தன்மையாய் - நற்குணங்கள் உடையவனே; நிகழ்த்துவாய் என்றான் - கூறுவாயாக என, இராமபிரான் வீடணனைக் கேட்டான். |
நீர்மை - நற்குணம் (தன்மையுமாம்) தார் - கொடிப்படை (அணிவகுப்பில் முதலில் வரும்) தூசிப் படையுமாம். |
(15) |