வடவரை - வடமேருமலை தமனியம் - பொன். மும்முடி - மூன்று சிகரங்கள். வாயுவுக்கும், ஆதி சேடனுக்கும் இடையே நிகழ்ந்த பலப் போட்டியில் ஆதி சேடன் தனது ஆயிரம் பணா மகுடங்களாலும் மேருமலையின் ஆயிரம் சிகரங்களையும் மூடிக் கவித்துக் கொண்டான். வாயு தேவன் அம்மலையின் மூன்று சிகரங்களைத் தனது வலிமையால் பறித்துக் கடலில் இட்டான். அந்த மலையே 'திரிகூடமலை' இலங்கை தோன்றிய வரலாறு இது. வாயுதேவன் என்று கூறாது 'அனுமன் தாதை' என்றது, அனுமனுடைய ஆற்றலால் இலங்கை எரியுண்டதை நினைவு கூர்ந்ததாகும். |
(17) |
6533. | 'ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ் |
| ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை, |
| வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே |
| சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். |
| |
வாழியாய்- நல்வாழ்வுடையவனே!; ஏழு நூறு யோசனை அகலம் - எழுநூறு யோசனை அகலமுடையதாகவும்; இட்ட கீழ் ஆழம் நூறு யோசனை - கீழ் ஆழம் நூறு யோசனை உடையதாகவும்; சூழும் மாமதில் - இலங்கை நகரைச் சூழ்ந்திருக்கும்படி கட்டப்பட்ட பெரிய மதில்; ஆழி மால் வரை - சக்கரவாளகிரி; உலகினை வளைத்த வண்ணமே - உலகத்தை வளைத்திருப்பதைப் போன்றதாகும்; அது சுடர்க்கும் மேலதால் - அம்மதில் சூரிய, சந்திரர்களுக்கும் எட்டாதபடி மேலே உயர்ந்ததாகும். |
வீடணன் இராமபிரானை 'வாழியாய்' என அழைத்துப் பேசுகிறான் என்றும் வாழ்ந்திருப்பவன் - நல்வாழ்வுடையவன்- அனைத்தையும் வாழவைப்பவன் என்றெல்லாம் கருதி 'வாழியாய்' என்றான்என்க. எழுநூறு யோசனை அகலமும், நூறு யோசனை ஆழமும் கொண்டதாக இந்த இலங்கையைச் சூழ்ந்துள்ள மதில் உலகை வளைத்திருக்கும் சக்கரவாள கிரியை ஒத்தது. சூரிய, சந்திரர்களாகிய சுடர்களுக்கும் எட்டாத உயரத்தில் இருப்பது என்பதால் 'சுடர்க்கு மேலதாய்' என்றான். ஆழி - சக்கரம் மால் - பெரிய |
(18) |
6534. | 'மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும், |
| இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால், |
| சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய |
| கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். |