மருங்கு உடை வினையமும் - அந்த மதிலிடத்தே அமைந்திருக்கும் வஞ்சக வேலைப்பாடுகளும்; பொறியின் மாட்சியும் - இயந்திரங்களின் சிறப்பும்; இருங்கடி அரணமும் - பெரிய காவலையுடைய மதிலும்; பிறவும் எண்ணினால் - மற்ற ஏற்பாடுகளையும் நினைத்துப் பார்த்தால்; சுருங்கிடும் - ஆயுட்காலம் போதாதபடி சுருங்கிவிடும்; என் பல சொல்லி - பலவற்றையும் சொல்வதால் என்ன பயன்?; சுற்றிய கருங்கடல் அகழது - சுற்றிலுமுள்ள கரிய பெரிய கடலே இலங்கையின் அகழியாயுள்ளது; நீரும் காண்டிரால்- நீங்களும் நேரில் காணலாம். |
பலவகையான இயந்திரங்களைக் கொண்டிருப்பதை "பொறியின் மாட்சி" என்றார். மிகுந்த காவலையுடைய மதிலை "இருங்கடி அரணம்" என்றார். இன்னும் எத்தனையோ வகையான பொறிகளும், படைக் கலங்களும் உண்டு என்பதை 'பிறவும்' என்றார். |
(19) |
வாயில் முதலியவற்றைக் காப்போர் |
6535. | 'வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர், |
| இடை இலர், எண்-இரு கோடி என்பரால்; |
| கடையுக முடிவினில் காலன் என்பது என்? |
| விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். |
| |
வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்- இலங்கை நகரின் வடக்குத் திசையில் உள்ள ஒளி விளங்கும் வாயிலில் தங்கிக்; காவல் காப்பவர்கள்; இடை இலர் - எதற்கும் பின் வாங்காத வலிமை உள்ளவர்கள்; எண் இரு கோடி என்பர் - பதினாலு கோடி பேர் என்பார்கள்; கடையுக முடிவினில் - யுகாந்த காலமுடிவிலே; காலன் என்பது என் - உயிர்களையெல்லாம் கொல்லுகின்ற எமனைப் போன்றவர் என்று எப்படிச் சொல்வது?; விடை வரு பாகனை - காளை வாகனத்திலே வரும் சிவபிரானை; பொருவும் மேன்மையோர் - ஒத்த பெருமை மிக்கவராவார். |
பொன்னாலும் மணிகளாலும் பொலிந்து திகழும் வடதிசை வாயிலை 'வயங்கு ஒளிவாயில்" என்றார். எவருக்கும் பின் வாங்காத பெரு வலி படைத்த காவலர்களாதலின் 'இடை இலர்' என்றார். காலன் என்பதை விடக் காலகாலனான சிவன் என்பதே பொருந்தும் என்பது கருத்து. இடைதல் - பின் வாங்குதல். |
(20) |