'பலரையும் துணைக்கு வைத்துக் கொண்டு, நீ இவனுடன் போர் புரிய வேண்டும்' என்று சொல்லப்புகுந்த வீடணன், தன் சொல்லை இலக்குவன் அசட்டை செய்துவிடுவானோ என்ற கருத்தில், "திண்ணிதின் உணர்தியால்" என்ற ஒரு எச்சரிக்கையையும் தருகிறான். தன்னுடைய அண்ணனைத் தவிர வேறு யாரையும் வீரர் என்று கருதும் இயல்புடையவன் அல்லன் இலக்குவன். மேலும், அவனுடைய அண்ணனே முன்னர், | 'இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ "கலக்குவென்" என்பது கருதினால் அது, விலக்குவது அரிது; அதுவிளம்பல் வேண்டுமோ? | (2416) | என்று கூறினான் என்றால், இலக்குவன் தன்னைப்பற்றி என்ன நினைந்திருந்தான் என்பதையும், அது ஓரளவு உண்மையும்கூட என்பதையும் அறிய முடியும். நுண்மாண் நுழைபுலம் மிக்கவனாகிய வீடணன், இலக்குவனோடு பழகிய சில நாட்களிலேயே அவனை நன்கு அறிந்திருந்தான். ஆதலால், மிக முக்கியமான நேரத்தில் சொல்லப்படும் அறிவுரையை அவன் கவனியாமல் அலட்சியமாக இருந்துவிடக்கூடும் என்று நினைத்தே, 'திண்ணிதின் உணர்தியால்' என்று எச்சரிக்கை செய்கிறான். அடுத்தபடியாக அவன் கூறும் இரண்டு சொற்கள் சிந்திக்கத் தக்கன. "தெளியும் சிந்தையால்" என்ற சொற்கள் அவன் எச்சரிக்கைக்கு அடிக்கோடிட்டுக் காட்டுவன வாகும். 'தெளிவான சிந்தையை முதலில் ஏற்படுத்திக்கொண்டு, பிறகு வலுவாக நான் கூறுவதை உணர்வாயாக' என்று இவ்வளவு விரிவாக ஒரே பாடலில் வீடணன் கூற்று அமைந்திருப்பது கம்பன் கவித்திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. | இதனைக் கேட்ட இலக்குவன் அறிவுத் தெளிவோடு 'மேலே என்ன செய்யவேண்டும்? என்று வீடணனையே வினவலாமா' என்ற நிலைக்கு வந்துவிட்டிருக்கவேண்டும். அந்த வினாவை எதிர்பார்த்து வீடணன், அடுத்த பாடலில் விடை கூறுகிறான். யார் யாரை உடனிருத்திக் கொள்ள வேண்டும் என்று பட்டியல் இடும் அவன், முதலில் மாருதியின் பெயரைக் கூறுகிறான். இறக்குந் தறுவாயில் வாலி, இராமனை நோக்கி, |
|
|
|