| ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம் |
| தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. |
| |
தேர் பதினாயிரம் பதுமம்- இராவணனது படையிலுள்ள தேர்கள் பதினாயிரம் பதுமமாகும்; செம்முகக் கார் வரை அவற்றினுக் கிரட்டி - சிவந்த புள்ளிகளைக் கொண்டமுகத்தையுடைய கரிய மலைபோன்ற யானைகளின் எண்ணிக்கை தேர்ப் படையிலும் இரண்டு மடங்கு (இருபதாயிரம் பதுமம்); கால் வயத்து ஊர் பரி - கால்கள் வலியனவாய் ஏறிச் செல்லப் பயன்படும் குதிரைகள்; அவற்றினுக்கு இரட்டி - யானைப்படையை விட இரண்டுமடங்கு (நாற்பதாயிரம் பதுமம்); ஒட்டகம் தார்வரு புரவியின் - ஒட்டகப் படை, மாலை யணிந்த குதிரைப் படையை விட; இரட்டி சாலுமே - இரண்டு மடங்கு நிறைந்ததாயிருக்கும் (எண்பதாயிரம் பதுமம்); |
'பதுமம்' என்பது ஒரு பேரெண்; கோடிக்கு மேற்பட்டது என்பர். சிவந்த - செம்புள்ளி வாய்ந்த முகத்தையுடைய யானைகள் கரிய மலை போன்ற வடிவுடையன வாதலின் 'செம்முகக் கார்வரை' எனப்பட்டது. தேர், கரி, பரி என்பதோடு காலாட்படை கூற வேண்டியிருக்க, அதனைக் கூறாது ஒட்டகப் படையைக் கூறியது கடற் கரை மணலில் நடக்க வல்லன வாதல் பற்றிப் போலும். |
(30) |
6546. | 'பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன் |
| மா இரு ஞாலத்து வைத்த மாப் படை |
| தேயினும், நாள் எலாம் தேய்க்கவேண்டுவது, |
| ஆயிர வெள்ளம் என்று அறிந்தது-ஆழியாய்! |
| |
ஆழியாய் - ஆணையாகிய சக்கரத்தை உடையவனே; பேயனேன் - பேய் போன்றவனாகிய நான்; என் பல பிதற்றி பேர்த்து- பலவும் திரும்பத்திரும்பக் கூறுவதால் என்ன பயன்?; அவன் மாயிரு ஞாலத்து - அந்த இராவணன் இப் பெரிய உலகத்திலே; வைத்த மாப்படை - நிறுத்தி வைத்துள்ள பெரியபடை; நாளெலாம் தேயினும் - உலகுள்ள நாள் வரை அழித்தாலும்; தேய்க்க வேண்டுவது - அழித்துக் கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கும்; ஆயிர வெள்ளம் என்று அறிந்தது- எனத் தெரிந்தது ஆயிரம் வெள்ளம் அளவினதாகும். |
வெள்ளம். ஒரு பெரிய அளவு; பதுமத்திலும் அதிகமானது. சக்கரவர்த்தி திருக்குமாரனாதலின் எங்கும் செல்லும் ஆணையுடைவன் |